பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம்

🕔 April 10, 2018

–  அஸீம் முகம்மட் –

ன்னார் பிரதேச சபை அங்குரார்ப்பண அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று முடிந்த பின்னர், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஹூனைஸ் பாருக், தனது பைல்களை தூக்கி எறிந்துவிட்டு, மு.கா கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை எச்சரித்து, தகாத வாரத்தைகளைப் பிரயோகித்து வசைபாடிய சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது, மன்னார் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதென திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.எம். மஸ்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கிணங்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில், மன்னார் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முஜாஹிர் என்பவருக்கு ஆதரவாக மு.கா உறுப்பினர் இஸ்ஸதீன் வாக்களித்தார். அதேவேளை தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கிய கொன்சஸ் குலாஸ் என்பவருக்கு ஆதரவாக மற்றொரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஜலீல் இன்சாப் வாக்களித்தார்.

மேலும், உப தலைவர் தெரிவின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அந்தப் பதவிக்காக நிறுத்தப்பட்ட உறுப்பினர் இஸ்ஸதீனுக்கு ஆதரவாக, மு.கா வைச் சேர்ந்த ஜலீல் இன்சாப் வாக்களிக்காத போதும், ஏற்கனவே தமது கட்சியின் உடன்பாட்டுக்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக உப தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தர்சீனுக்கு ஆதராவாகவும் வாக்களிக்கவில்லை.

சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக ஜலீல் இன்சாப் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தமையே, ஹூனைஸ் பாருக் இற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைசும் ஏற்கனவே இணங்கிய விடயத்துக்கு மாற்றமாக, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் செயற்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்