தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

🕔 March 3, 2018

– அஹமட் –

நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கலந்து கொண்ட நிகழ்விலும், இந்தக் குற்றச்சாட்டினை மேலும் நிரூபிக்கும் வகையில், பௌத்த பிக்குகள் நடந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி ஆசிரியர் நியமனங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

முன்னதாக, நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட அனைவரும், தேசிய கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நின்றனர்.

ஆயினும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகள் எவரும் தேசிய கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கவில்லை.

நாட்டின் தேசிய கீதத்துக்கு மரியாதை செய்யாத இவர்கள், தம்மை தேசப் பற்றாளர்கள் என்றும், பூமி புத்திரர்கள் எனவும், மார்தட்டிக் கொள்வதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது, ஏனைய மதத் தலைவர் ஒருவர் எழுந்து நிற்காமல் விட்டால், அதனை – பௌத்த இனவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா? கண்டும் காணாமல் விடுவார்களா? என்கிற கேள்விகளும் இங்கு முக்கியமானவையாகும்.

இந்த காட்சிகளைக் காணும் போது, மேற்படி பௌத்த பிக்குகளை விடவும், ஏனைய சமயத்தவர்கள், தேசபிமானம் மிக்கவர்களாகவே தெரிகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்