ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

🕔 February 26, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்டபாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கரமசிங்கவிற்கும் இடையில் ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, ஆவணமொன்றினை திஸ்ஸ அத்தநாயக்க காட்சிப்படுத்தினார். இது போலி ஆவணமெனக் கூறப்படுகிறது.

இதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரதமரும் ஜனாதிபதியும் முதலாம் மற்றும் 02ஆம் சாட்சியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அதிக வேலைப்பளு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாதிருப்பதாக அரச தரப்பு சட்டதரணி தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments