விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை

🕔 February 9, 2018

முதுகு வலியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் முன்வைத்த கோரிக்கையினை சிறைச்சாலை திணைக்களம் நிராகரித்துள்ளது.

குறித்த கோரிக்கையினை நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் முன்வைத்திருந்தார்.

அர்ஜுன் அலோசியஸை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்த பின்னர் வழங்கிய அறிக்கைக்கு அமைய, அலோசியஸின் கோரிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை, சிறைச்சாலை திணைக்களம் நிராகரித்தது.

இதேவேளை, அவருக்கு அடிப்படையான மருந்துகளை மருத்துவ அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், வெளியிலிருந்து தனக்கு தலையணை வழங்குமாறு, அர்ஜுன் அலோசியஸ் முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சக சிறைக் கைதிகள் பயன்படுத்திய சாதாரண தலையணை மற்றும் போர்வை ஆகியவை, அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பெபேசுவல்ஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவிலுள்ள  விசேட உயரடுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலோசியஸைப் பார்வையிடுவதற்கு, அவரின் குடுப்பத்தார் தவிர, எந்தவொரு அரசியல்வாதியும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்