பதுங்கித் தாக்குதல்

🕔 August 18, 2015

Article - 09திராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.

மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு அதிரடித் ‘தாக்குதலை’ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளான – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்த ஆகியோரை தடாலடியாக, அவர்களின் பதவிகளிலிருந்து தூக்கி வீசியதோடு, அவர்களுடைய சுதந்திரக் கட்சி உறுப்புரிமையினையும் ரத்துச் செய்தமைதான் – மைத்திரி நடத்திய அந்த அதிரடித் ‘தாக்குதல்’களாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகிவற்றின் தலைவர் என்கிற அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த ‘தாக்குதலை’ ஜனாதிபதி மைத்திரி, வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

இந்தத் ‘தாக்குதலு’க்கு முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – ஜனாதிபதி மைத்திரி எழுதிய கடிதம் மிகவும் அவதானத்துக்குரியது. ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிக்க முடியாது என்பதை மிக வெளிப்படையாகவும், உறுதியாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

உண்மையில், அந்தக் கடிதத்தை – தேர்தல் பிரசாரத்தின் அந்திம நாட்களில் ஜனாதிபதி எழுதியிருந்தமை இங்கு கவனிப்புக்குரியதாகும். இன்னொருபுறம், குறித்த கடிதம் எழுதப்பட்டிருந்த முறையும், அதில் சொல்லப்பட்ட விடயங்களும் உணர்வுபூர்வமானவையாகவும் இருந்தன. மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியின் போது, அவரின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ, தனக்கு இழைத்த அநியாயங்களையும், அதைக் கண்டும் காணாமல் விட்ட, மஹிந்தவின் ‘நன்றிகெட்ட’ தனத்தினையும், ஜனாதிபதி மைத்திரி தன்னுடைய கடிதத்தில் அம்பலப்படுத்தியிருந்தார். இதனை ஊடகங்களில் படித்த அநேகர் – ஜனாதிபதி மைத்திரி மீது கழிவிரக்கம் கொண்டனர்.

இவ்வாறு, அந்தக் கடிதத்தின் மூலம் படித்தவர்களின் பாராட்டினையும், சாதாரண மக்களின் கழிவிரக்கத்தினையும் சம்பாதித்துக் கொண்ட கையோடுதான், யாப்பா மற்றும் சுசில் ஆகியோர் மீதான ‘அதிரடித் தாக்குதலை’ ஜனாதிபதி நடத்தினார்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, அதற்குரிய வேட்பு மனுக்களைத் தயாரித்து, அவற்றில் கையொப்பமிடுபவர் கட்சியின் செயலாளராவார். இதேபோன்று, பொதுத் தேர்தலின் பின்னர் கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்குமாயின், அந்தக் கட்சி சார்பில் – குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்துக்குரிய நபரின் பெயர் குறித்து அறிவிப்பவரும் கட்சியின் செயலாளர்தான். இதனால்தான், ஐ.ம.சு.முன்னணியின் செயலாளரான சுசில் பிரேம ஜெயந்தவை தனது கைக்குள் வைத்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு விருப்பமானவர்களையெல்லாம் இந்தத் தேர்தலில், வெற்றிலைச் சின்னம் சார்பாக அபேட்சகர்களாய் களமிறக்க முடிந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஐ.ம.சு.முன்னணியின் தலைவராக இருக்கின்றபோதும், அவருக்கு உடன்பாடில்லாத பலரை, மஹிந்தவின் உத்தரவுக்கிணங்க, வேட்பாளர் பட்டியலில் சுசில் பிரேம ஜெயந்த உள்ளடக்கியிருந்தார். இந்த செயற்பாடானது, ஜனாதிபதி மைத்திரிக்கு பெருத்த அவமானத்தினை ஏற்படுத்தியிருந்தாலும், அதை அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காக, மேற்சொன்ன செயற்பாடுகளையெல்லாம் – தான் பொறுத்துக் கொண்டதாக மைத்திரி சொல்லிக் கொண்டாலும், இந்தக் கூத்துக்கள் அவருக்குள் கோபத்தீயை ஏற்படுத்தாமல் விட்டிருக்காது.

இருந்தபோதும், அப்போது எதிராளிகளின் கைகள் ஓங்கியிருந்தமையினால், மைத்திரி பொறுமை காத்தார். இதன்போது, மைத்திரிக்கு சார்பானவர்கள் கூட, அவரின் பொறுமையினை பலவீனமாக எண்ணிக் கொண்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்கள். கட்சிக்குள் மைத்திரி கையாலாகாத்தனத்துடன் இருக்கின்றார் என்றும், சூழ்நிலைக் கைதியாகச் செயற்படுகின்றார் எனவும் பலர் கேலி செய்தனர்.

உண்மையில், எதிராளிகளின் பலவீனமான தருணத்துக்காகவே – மைத்திரி அப்போது பொறுமை காத்தார் என்பதை, இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் நேரத்தில் எல்லோரும் பரபரப்பாக இருந்த பொழுதில், யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் – யாப்பா மற்றும் சுசில் ஆகியோரை, அவர்களின் பதவிகளிலிருந்து தூக்கியெறிந்ததோடு, அந்த செயற்பாட்டுக்கு – நீதிமன்றத்தின் ஒப்புதலையும் மைத்திரி பெற்றுக்கொண்டார்.

யாப்பா மற்றும் சுசில் ஆகியோரை அவர்களின் செயலாளர் பதவிகளிலிருந்து, அவர்களின் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளதாகவும், பதில் செயலாளர்களாக சுதந்திரக் கட்சிக்கு துமிந்த திஸாநாயக்கவும், ஐ.ம.சு.முன்னணிக்கு பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதேவேளை – யாப்பா மற்றும் சுசில் ஆகியோர், தத்தமது செயலாளர் பதவிகளுக்கான கருமங்களை மேற்கொள்வதையும், பதில் செயலாளர்களின் பணிகளுக்கு இடையூறு செய்வதையும் தடைசெய்யுமாறு, மனுவொன்றின் மூலம் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி மனுவினை ஆராய்ந்த நீதிமன்றம் – ஓகஸ்ட் 28 ஆம் திகதிவரை, யாப்பா மற்றும் சுசில் ஆகியோர், அவர்களின் செயலாளர் பதவிகளை வகிப்பதற்குத் தடைவிதித்து, உத்தரவிட்டது.

மைத்திரி மேற்கொண்ட இந்த அதிரடியானது, மஹிந்த மற்றும் அவரின் ஆதரவு வேட்பாளர்களுக்கு – கிட்டத்தட்ட பொறியில் சிக்கிய எலியின் நிலையினை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில், ஐ.தே.முன்னணி ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் உள்ளதாகவே பெருமளவான கருத்தக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன. ஆனாலும், தேசிய அரசாங்கமொன்றினை – தான் அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி கூறிவருகின்றார். அப்படியாயின், அமையவுள்ள அரசாங்கத்தில் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் நிச்சயம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இதேவேளை, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பிரேரிக்கப்பட்டுள்ள சிலரின் கனவுகளிலும் – மண்விழும் அபாயம் உள்ளதாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசிகளான டிலான் பெரேரா, டிரான் அலஸ் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள போதும், தற்போதைய நிலையில், மைத்திரியின் விருப்பமின்றி அவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியாது.

ஆக, இவ்வாறான பல்வேறு விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான், யாப்பா மற்றும் சுசில் ஆகியோரை – அவர்களின் செயலாளர் பதவிகளிலிருந்து தூக்கிவிட்டு, தனக்கு ஆதரவான இருவரை – பதில் செயலாளர்களாக மைத்திரி நியமித்துள்ளார் என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

மறுபுறம், ஐ.ம.சு.முன்னணி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதம மந்திரி பதவி இல்லையென்றாகி விட்டது. ஜனாதிபதி மைத்திரி, அதனை இரண்டாவது தடவையாவும் உறுதி செய்து விட்டார். அப்படியென்றால், பிரதமர் பதவி யாருக்கு என்கிற கேள்வியொன்று இங்கு எழுகிறதல்லவா? ஐ.ம.சு.முன்னணி வெற்றிபெற்றால் கூட, பிரதம மந்திரியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் ஜனாதிபதி மைத்திரி நியமிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இதற்காக, ஐ.ம.சு.முன்னணியிலுள்ள ஒரு தொகை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை ரணிலுக்கு மைத்திரி பெற்றுக்கொடுக்கக் கூடும்.

இன்னொருபுறம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவார். ஆனாலும், அவரின் பிரதமர் கனவு பலிக்காது என்கிற நிலையில், ‘வெறும்’ உறுப்பினரொருவராக – அவர் நாடாளுமன்றத்தில் வந்திருக்கப் போவதில்லை.

ஆனால், ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற்றும், தனக்கு பிரதமர் பதவி மறுக்கப்பட்டால், அதைப் பெற்றுக் கொள்வதற்காக, தனது முழுப் பலத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் பயன்படுத்துவார். ஏனெனில், அவருக்கு எஞ்சியுள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவேயாகும். எனவே, பிரதமர் பதவியை வசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ – மிக மூர்க்கத்தனத்துடன் போராடுவார்.

இருந்தாலும், மஹிந்தவுக்கு பிரதமர் பதவியினை வழங்காமல் விடும்போது, அவர் எதையெல்லாம் செய்யத் துணிவார் என்பதை, ஜனாதிபதி மைத்திரி கணக்குப் போட்டுப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். எனவே, அந்தக் கணக்குக்கு ஏற்றால்போல், மஹிந்தவை அடக்குவதற்கான திட்டமொன்றினையும் மைத்திரி தீட்டி வைத்திருப்பார் என்று நம்பலாம். அந்தவகையில், மஹிந்த மூர்க்கம் கொள்ளும்போது, அந்தத் திட்டம் அவிழ்த்து விடப்படுமென்று, களநிலவரத்தினை கூர்ந்து அவதானிப்போர் கருதுகின்றனர்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்