கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 January 21, 2018
ன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கல்முனை மாநகரசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சனிக்கிழமை கல்முனை கடற்கரை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

“தேர்தல் ஆணையாளர் அனுப்பிய சிபார்சின் பேரில்தான், வக்பு சபை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டிய நிலவரம் ஏற்பட்டது. இதை முஸ்லிம் காங்கிரஸ் தூண்டி செய்ததாக பேசிக்கொண்டு திரிகின்றனர். ஆனால், இப்படி நடக்கும் என்பதை தலைமை அறிந்து வைத்திருந்தது. ஏனென்றால், பள்ளிவாசலை வைத்து தேர்தல் சட்டங்களை மீறும்வகையில், பகிரங்கமாக அரசியல் செய்துகொண்டிருந்தால் தேர்தல் ஆணையாளர் கவனிக்காமல் விட்டுவிடுவார் என்று நம்புவது மடமைத்தனம்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்காக இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் அதற்கெதிராக ஒரு வார்த்தைகூட நான் பேசவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் சம்பந்தமாக முழு தார்மீக பொறுப்பையும் சுமந்துகொண்டு இதயசுத்தியுடன், மிகவும் பொறுமையாக நடக்கின்ற விடயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிவில் சமூகம் என்ற ரீதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து பகிரங்கமாக எதையும் பேசவில்லை. ஆனால், இந்த சிவில் சமூகம் யார்? சிவில் சமூகம் என்ற தோரணையில் வேறு சக்திகள் செயற்படுகின்றதா? என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கான தீர்வாக கல்முனை மாநகர சபையின் ஆட்சி, புதிய தேர்தல் முறையினால் முஸ்லிம்களின் கைக்கு வருகின்ற வாய்ப்பு இருக்கின்ற நிலையில், அதைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர்களை மேலும் மேலும் அழைத்துவந்து வாக்குறுதிகளை கொடுக்கின்ற படலம் தொடர்கிறது. புதிய கலப்பு தேர்தல் சிறுபான்மை சமூகங்களுக்கு சவாக இருக்கின்ற நிலையில், கல்முனையை எதேர்ச்சையாக துண்டாடுவதில் இருக்கின்‌ற பாதங்கள் குறித்து இங்குள்ள தூதுக்குழுக்கள் எல்லோரிடமும் வந்து பேசியது.

அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் கல்முனை, சாய்ந்தமருது பள்ளித் தலைவர்களை அழைத்து நாங்கள் பேசினோம். தீர்மானங்கள் எடுக்கின்றபோது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற நிலையில், வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுதொடர்பாக பேசினோம். எனினும், ஒத்திவைக்கப்படவேண்டிய கூட்டமாக அது நடந்து முடிந்துள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்ற தீர்மானத்திலேயே எல்லா தலைமைகளும் இருக்கின்‌றன.

ஒரு  பிரச்சினை வருகின்றபோது, எல்லா பக்கங்களிலும் நீதியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. தனியாக பிரிப்பது என்றாலும், நான்காக பிரிப்பது என்றாலும் அல்லது பிரிக்காமல் இருப்பது என்றாலும் எல்லோரும் நூறு வீதம் திருப்திப்படும் தீர்வாக இருக்காது. இதன்போது மிகப்பெரிய விபரீதங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லாமல், சாய்ந்தமருதில் வீதி மறியல் போராட்டம் நடத்தி, பள்ளிவாசல் நிர்வாகத்தை வலுக்கட்டாயப்படுத்தி இதற்கு தீர்வுகாணவேண்டும் என்று முயற்சிகள் நடக்கின்‌றன. சிவில் சமூகம் என்ற போர்வையில், எந்த நிகழ்ச்சிநிரலில் செயற்பட்‌டாலும் அவர்களது நியாயப்பாடுகள் தொடர்பில் நாங்கள் மறுத்துரைக்கவில்லை. ஆனால், மாற்றுத்தரப்பு நியாயங்களையும் கருத்திற்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

இப்போது நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது, முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்கவேண்டும் என்று துடிப்பவர்கள் சுயேட்சைக்குழுவில் களமிறக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டபோது, இந்தப் போராட்டத்தின் பின்னாலிருந்த சமூகம் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்ததா அல்லது இதில் குளிர்காய முற்படுகிறார்களா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. சண்டித்தனமாக இதைக் கையாள்வதில் இருக்கின்ற விபரீதங்களை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சில அமைச்சர்கள் சாய்ந்தமருதுக்கு படையெடுத்து, தங்களது கட்சிகளுக்காக வாக்குறுதியளித்துவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கருத்துகளை நேரடியாகப் பேசலாம். ஆனால், சட்டரீதியாக விடயங்களை சாதிப்பதாக இருந்தால் சட்டத்தின் வாயிலாகவே மேற்கொள்ள முடியும். உள்ளூராட்சி எல்லைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சனத்தொகையுடன், எந்த நிபந்தனைகளுடன் ஒரு உள்ளூராட்சி மன்றம் பிரிக்கப்படலாம் என்பதற்கான சில நியதிகள் இருக்கின்றன.

நியதிகளின் அடிப்படையில்தான் உள்ளூராட்சி மன்றங்கள் பிரிக்கப்படமுடியும். எடுத்த எடுப்பில், அமைச்சர் நினைத்தாலும் அதை சாதிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சமாதானமாக செய்யவேண்டிய விடயம் இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் இதற்கான தீர்வை சொல்லக்கூடியதாக அமையவேண்டும். எங்களுக்கு மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொடுப்பதன் மூலம்தான் அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சாய்ந்தமருதில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றிபெறுவதன் மூலம்தான், எங்களது கைகளில் இருந்த ஆட்சி வேறு கைகளுக்கு செல்கின்‌ற ஆபத்தை இல்லாமல் செய்யலாம். கல்முனையின் அதிகாரம் எங்களது கைகளில் இருக்கின்றபோதுதான், இந்த பிரச்சினைகள் குறித்து சமூகமாக பேசி தீர்வுகாணலாம். சுயேட்சைக் குழுவை நிறுத்தி எந்த விடயத்தை நிறுவப் போகின்றோமோ, அதற்கு மாற்றமாக இன்னும் பீதியை கூட்டி பிரச்சினையை இழுத்தடிக்கின்ற ஒரு முயற்சியைத்தான் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே எங்கள் கவலை.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலின் குரல்வளையை நசுக்குவதன் மூலம் அரசியல் சுயலாபத்தை அடைய எத்தனித்துக்கொண்டிருக்கின்றனர். சொந்த மண்ணில் பிரதேச சபையை பறிகொடுக்கப்போகும் பீதியில், இன்று கிழக்கில் வந்து பிரசாரம் செய்கின்றனர். சாய்ந்தமருதின் நியாயமான கோரிக்கையை தங்களது கோசமாக எடுத்துக்கொண்டு இவர்கள் திரைமறைவில் செயற்படுகின்றனர். இந்த எத்தனம் என்பது, முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அழிக்கவேண்டும் என்ற கபட நாடகமே தவிர வேறில்லை.

இந்த இயக்கத்தை பாதுகாக்கவேண்டும் என்ற தார்மீக பொறுப்பிலுள்ள சாய்ந்தமருது மக்கள், இந்த இயத்துக்கு துரோகம் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு துரோகமிழைக்காதபோது, அவர்களுடைய நியாயமான கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக நாங்கள் சாய்ந்தமருது மக்களுடன் நேரடியாக பேசவேண்டும். ஆனால், தலைமை வந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சாய்ந்தமருதுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டில் கொடுத்திருக்கிறது. முதலாவது மாகாணசபை தேர்தலில் 03 உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் தெரிவானார்கள். ஆனால், அதிகாரங்களில் இருந்தவர்கள் கட்சி மாறிச் சென்றபோது கைசேதங்கள் ஏற்பட்டது என்பது உண்மை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. இவர்கள் பொறுமையிழந்து போனதன் பின்விளைவுகளை சாய்ந்தமருது கட்சிப் போராளிகள் உணர்ந்திருக்கிறார்கள்” என்றார்.

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்