மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை

🕔 December 28, 2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

“எனவே, முஸ்லிம் சமூகத்தையும், நம்மையும் மீட்டெடுக்கும் போராட்டக் களமாகத் திறக்கப்பட்டுள்ள எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், வண்ணத்துப் பூச்சியை சின்னமாகக் கொண்ட, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற வாருங்கள்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மு.கா.வுக்குள் எஞ்சியிருப்போர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இன்னும் அசைக்க முடியாத ஒரு ‘சுறங்கை’ ஆதரவாளர்கள் எஞசியுள்ளனர். அவர்களோடு, ‘தலைவர் ஆட்டம் கண்டுவிட்டார், இத்தேர்தலோடு அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமித்துவிடுவார், அதன் பிறகு நாம் கட்சியைக் கைப்பற்றிவிடலாம்’ என்று எண்ணும் பிரமுகர்களும் மிகுதியாக உள்ளனர்.

ஆட்டுக் கடா நடக்கும் போது ஆடுகிற கொட்டை, ‘இதோ விழப்போகிறது, அதோ விழப்போகிறது, விழுந்ததும் தூக்கிக்கொண்டு பறக்கலாம்’ என்று, பின்னால் அலையும் காகங்களின் நிலையை ஒத்ததுதான், மேற்சொன்ன பிரமுகர்களின் நிலையாகும்.

இனத்துவ அரசியல் புரியாதவர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்போடு தேர்தல் கூட்டமைக்கும் எண்ணத்தில் மன்னார் சென்று, ஏமாந்து திரும்பிய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு, இனத்துவ அரசியலின் பரிமாணம் புரியவில்லை.

முஸ்லிம் காங்கிரசோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பதென்பது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தது போலாகிவிடும் என்று, தமிழர் தேசியப் பிரச்சார அரசியலில், பழமும் தின்று கொட்டையும் போட்ட கூட்டமைப்புக்கு புரியாமலா இருக்கும்?

இதனை உய்த்துணரும் திறன் இருந்திருந்தால், ஆட்டின் ஆடும் கொட்டைக்குப் பின்னால் அலையும் இந்தக் கூட்டம், உலங்கு வானூர்தியில் மன்னார் சென்று, இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, தமது வாயை மட்டும் சப்பிச்சப்பி இருந்துவிட்டு திரும்பியிருக்குமா என்ன?

படுகுழியில் தள்ளியவர்கள்

இப்படித்தான் இந்தப் பிரமுகர் கூட்டம் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வை நோக்காகக் கொண்டு, அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தயாரிக்கும் போதும், வெறும் வாயை சப்பியபடி – காலம் தள்ளி முஸ்லிம் சமூகத்தை படுகுழிக்குள் தள்ளியது.

ஆடும் கொட்டைக்குப் பின்னால் அலையும் இதே கூட்டம், முஸ்லிம் சமுதாயத்தின் தேசிய அரசியல் அந்தஸ்தை மூழ்கடித்த – மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்துக்கும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்த பின்னர், ஆட்டுக் கொட்டையை தேசிக்காய் புளி கலந்து அவித்துத் தின்னும் கனவோடு, வாய்க்குள் விரலை நுழைத்து விசிலடித்துத் திரிகிறது.

காத்திருக்கும் அபாயம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் தொகுதிவாரித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும். பின்னர், கடந்த 28 வருடங்களாக இலங்கையின் நாடாளுமன்ற அரசியலில் கணிசமான அளவு தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய முஸ்லிம்கள், மீண்டும் வெறும் பார்வையாளர்களாக அதலபாதாளாத்தில் தள்ளிவிடப்படுவார்கள். அதன் பின்னரும் ஆடுகிற ஆட்டுக் கொட்டையிலேயே, வைத்த கண் வாங்காமல் லயித்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயமாகும்.

நமது சகோதர தமிழ்த் தேசிய சக்திகளில் சில, இன்று அரசாங்கத்தில் பங்கு பெறாமலே உயர்வான பிடியை வைத்துள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், அவர்கள் மேலும் அரசின் மீதான பிடியை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஏனெனில் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுதாபிகளாக இருந்த போதும், அக்கட்சியில் கலந்து கரைந்து போய்விடவில்லை. இதுமட்டுமல்ல, வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் தலைவர்கள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்களேயன்றி, தெற்கையோ மத்தியையோ சேர்ந்தவர்களல்லர். அத்தலைவர்களின் தேர்தல் வெற்றி என்ற சுய அரசியல் தேவைக்குக் கூட, வேறு தேசியக் கட்சிகளின் கடைக் கண் பார்வையோ, அக்கட்சிகள் செல்வாக்குச் செலுத்தும் தொகுதி ஒன்றின் அமைப்பாளர் பதவியோ அவர்களுக்கு அவசியமற்றது.

ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி  வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது.

அழைப்பு

எனவே, கடந்த சுமார் 30 வருடங்களாக தோழோடு தோழுரசக் கட்சி மற்றும் சமூகப் பணிகளில் என்னோடு பங்கெடுத்த – இன்னும் அந்தத் தொழுவத்தில் தொங்கிக் கிடக்கும் போராளிகளே; நமது கட்சியையும், நமது சமூகத்தையும் ஏன் நம்மையும் மீட்டெடுக்கும் போராட்டக் களமாகத் திறக்கப்பட்டுள்ள எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில்,வண்ணத்துப் பூச்சி சின்னத்தைக் கொண்ட  ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலில், கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் சங்கமமாக ஆக்கப்பட்டதுடன், மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது. அதன் கம்பீர நடை தளர்ந்து தள்ளாடியபடி நடமாடுகிறது. அதன் உயிருக்காகப் போராடுகிறது. உடனடியாக மாற்று மருந்தூட்டி நமது முஸ்லிம் காங்கிரசின் உயிரைக் காப்பாற்றியாகவேண்டும். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புதான் மாற்று மருந்து என்பதை உணருங்கள்.

உயிரைக் காப்பாற்றுங்கள்

முஸ்லிம் காங்கிரசில் தொங்கியிருக்கும் பிரமுகர்களே, கொட்டை விழப்போவதில்லை. மாறாக ஆடுதான் செத்து வீழப்போகிறது. எனவே உங்கள் காத்திருப்பு வீணானது – அர்த்தமற்றது. தக்பீர் சொல்லி அறுக்காத ஆட்டின் கொட்டையைக் கறிக்கு எடுக்கமாட்டீர்களல்லவா? ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி தானாகச் செத்த ஆட்டை – கொட்டையுடன் சேர்த்தே புசிக்கும் பழக்கமுடையவர்களை உள்ளடக்கியது. ஆடு சாகும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆட்டின் உயிரை நீங்கள் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துமாறு கவலையுடன் வேண்டுகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்