தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத்

🕔 December 17, 2017

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற தனித்துவம் பேசிய அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுய விமர்சன ரீதியாக மனம் திறந்து, அந்தப் பொறுப்பில்  ஒரு பங்கை தான் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நமது மக்களும் கடந்த 17 வருடங்களாக இருந்த நிலைமையை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அக்காலத்துக்குள் நடந்தேறிய பல தேர்தல்களில் சமூக மாற்றம் ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறோம் என்பதை அவர்களும் உணர்தல் வேண்டும்.

மேலும், கிழக்குக்கு வெளியில் இருந்து தலைமையை ஏற்றுக் கொண்டோம். அத்தலைமைக்கு நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் அதிக வாக்குகளை வழங்கினோம். அதேபோன்று, மாகாண சபைத் தேர்தல் ஒன்றில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளையும் அளித்து அங்கீகாரம் வழங்கினோம். இதன் காரணமாக தேசிய அரசியல் அரங்கம், மற்றும் சர்வதேச அரங்கம் ஆகியவற்றில் நம்மை வைத்து ஒரு சூதாட்டக் களத்தைத் தீர்மானிப்பதற்கு நாமே அனுமதி வழங்கியதையும் அறிவுக் கண் திறந்து ஆராய்தல் வேண்டும்.

எனவே, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார மேடைகளை சிவில் சமூகப் பிரதிநிதிகள் பொது மேடைகளாக ஏற்பாடு செய்தல் வேண்டும். அம்மேடைகளில் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து தமது கருத்துக்களை முன் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தலைவர்கள் நேரடிக் கருத்தாடலில் ஈடுபட வேண்டும். பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தலைவர்கள் நேரடிப் பதில்களைத் தரவேண்டும். கூட்ட ஏற்பாடுகளுக்கான செலவுகளை அரசியல் கட்சிகள் பகிர்ந்து ஏற்போம்.

பொது மேடைகளில் கருத்துகளையும், கடந்த 17 வருடகால எனது அனுபவங்களையும் சகல முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் அமர்ந்து மக்கள் முன் பகிர நான் தயாராக இருக்கிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்