உள்ளுராட்சித் தேர்தல்; யாரெல்லாம் போட்டியிட முடியாது என்று அறிவீர்களா?

🕔 December 16, 2017

– மப்றூக் –

நீதித்துறை உத்தியோகத்தர்கள், ஆயுதப்படை உத்தியோகத்தர், அரச சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை அல்லது கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்ட 07 வகையான பதவிகளை வகிப்போர் உள்ளுராட்சித் தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என, அரச சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாபன விதிக் கோவையின் XXXII அத்தியாயத்துக்கு அமைய, மேலே குறிப்பிடப்பட்டோருக்கு, அரசியல் உரிமைகள் கிடையாது.

அவ்வாறு அரசியல் உரித்துக் கிடையாதவர்களின் முழு விபரம் வருமாறு;

  1. நீதித்துறை உத்தியோகத்தர்.
  2. ஆயுதப்படை சேவைகளின் உத்தியோகத்தர்.
  3. பொலிஸ் அலுவலர்கள்.
  4. குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின்படி, பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுகின்ற ஏனைய சமாதான அலுவலர். (உதாரணமாக, கிராமசேவை உத்தியோகத்தர்)
  5. சிறைச்சாலை உத்தியோகத்தர்.
  6. தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில் சேவையாற்றுகின்ற உத்தியோகதர்தர்கள்.
  7. அரச சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை அல்லது கண்காணிப்பு அலுவலர்கள்.

மேலே குறிப்பிடப்பட்டவர்களுக்கு, உள்ளுராட்சித் தேர்தலொன்றின்போது, தமது வாக்கினைப் பிரயோகப்பது தவிர்ந்த, வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது தடையாகும்.

ஆயினும், இவர்கள் தேர்தலொன்றில் போட்டியிடுவதாயின், அவர்களின் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தல் வேண்டும்.

அதேவேளை, குறித்த அலுவலர் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலத்தைக் கொண்டிருப்பாராயின், தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சேவையிலிருந்து அவர் இளைப்பாற முடியும்.

அரசியல் உரித்துக் கிடையாத,  பதவி நிலை உத்தியோகத்தர் என்போர் யார்?

2007/06/11 திகதி நடைமுறையில் காணப்பட்ட பொது நிருவாக சுற்று நிருபம் 06/2006 மற்றும் அதனோடு தொடர்புடைய திருத்தங்களுக்கமைய, அரச சேவையின் பதவி நிலை வகுப்பு அலுவலர்களாக பின்வரும் பதவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாம் நிலை மட்டம்:

  • வெளிக்கள / அலுவலக அலுவலர்கள்.
  • அதி விசேட வகுப்பு முகாமைத்துவ உதவியாளர்கள்.
  • இலங்கை அதிபர் சேவையிலுள்ளோர்.
  • பொலிஸ் பரிசோதகர் / பிரதம பொலிஸ் பரிசோதகர், ஏனைய பாதுகாவலர் சேவைகளின் சமமான பதவிகள்.
  • தாதியர் சேவை / வைத்திய பணிகளுக்கான தொழில் முன் சேவை / இடைநிலை மருத்துவம் ஆகிய சேவைகளின் விசேட வகுப்பு / தரம்.
  • மருத்துவ தொழில் புரிவோர்.

சிரேஷ்ட மட்டம்:

  • நிறைவேற்றுநர்கள் / சிரேஷ்ட நிறைவேற்றுநர்கள்.
  • நீதி / சட்ட அலுவலர்கள்.
  • வைத்திய அலுவலர்கள்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் 9(1)ஆம் பிரிவுக்கமைய 2007.06.01ஆம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட பதவிகளுக்காக, 2007.06.01ஆம் திகதிக்கு நடைமுறையிலிருந்த சம்பளத் திட்டத்தின் ஆரம்பச் சம்பளம் வருடமொன்றுக்கு 227,280/= (மாதம் 18,940/=) அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளமொன்றினைப் பெறுகின்ற அலுவலர்கள் தமது சேவைக் காலத்தில், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியற்றவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்