சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது

🕔 November 26, 2017

– ஆசிரியர் கருத்து –

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான திசை நோக்கித்  திரும்புகின்றனவா என்கிற கேள்வியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் சாத்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான செயற்பாடுகள், ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சாய்ந்தமருதிலுள்ள வீட்டுக்கு கல்லெறிந்து தாக்கும் நிலைக்கு மாறியது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கை நியாயமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ளதோடு, அவர்களின் நியாயத்தினை ஆதரிக்கும் வகையிலான கட்டுரைகளையும் பதிவு செய்திருக்கின்றன.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சாய்ந்தமருது பள்ளிவாசலும், அதன் தலைவர் வை.எம். ஹனீபாவும் தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பள்ளிவாசலினுடைய தலைமையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் உயர் ஒழுக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்றுதான் மக்களும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், சில தருணங்களில் அந்த ஒழுக்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சாய்ந்தமருதுக்கென உள்ளுராட்சி சபையொன்றினைக் கோருவதற்கு, அந்தப் பிரதேச மக்களுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதோபோன்று கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை ‘இப்படித்தான் பிரிக்க வேண்டும்’ என்று கூறுவதற்கான உரிமை – கல்முனை மக்களுக்கும் உள்ளது.

“கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காகப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் கல்முனை மாநகரம் எங்கள் கைகளுக்குள் தொடர்ந்தும் இருக்கும்” என்று, கல்முனை பிரதேசத்தவர்களோ அல்லது அப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத்தோ பிரதியமைச்சர் ஹரீசோ கூறுவது, அவர்களுடைய  உரிமையாகும்.

அப்படிக் கூறக் கூடாது என்று அவர்களை யாரும் தடுக்க முடியாது. அப்படிக் கூறுகிறார்கள் என்பதற்காக அவர்களை – சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் யாரும் தாக்கவோ தண்டிக்கவோ முயற்சித்தால் அது நியாயமாகாது.

கடந்த வாரங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து நடத்தப்பட்ட பிரகடன நடவடிக்கையின் போது, பிரதியமைச்சர் ஹரீசின் சாய்ந்தமருது வீடு கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது. ஹரீசின் மனைவி சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் என்பதைக் கூட, தாக்குதல் நடத்தியவர்கள் நினைத்துப் பார்க்கத் தவறி விட்டனர்.

இது இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதிலுள்ள வபா பாறுக்கின் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் மீதும் தாக்குதல் நடத்தும் நோக்குடன், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு தொகையானோர், வபா பாறுக்கின் வீட்டுக்கு சென்று அட்டகாசம் புரிந்திருக்கின்றனர்.

வபா பாறுக்கின் சொந்த சகோதரியைத்தான் ஜவாத் திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் ஜவாத்துக்கு வபா பாறுக் மைத்துனர். வபா பாறுக் எழுதிய கவிதைப் புத்தகம் ஒன்று தொடர்பான – ஓர் இலக்கிய ஒன்று கூடல்தான் வபா பாறுக் வீட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காகத்தான் ஜவாத் அங்கு சென்றார்.

ஜவாத்தின் சகோதரர் ஹாத்தீமும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஹாத்தீமுக்கு வபா பாறுக் நல்ல நண்பருமாவார்.

இவ்வாறானதொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதுதான், வபா பாறுக்கின் வீட்டை ஒரு தொகையானோர் சுற்றி வளைத்து; “ஜவாத் எங்கே” என்று கேட்டு சண்டித்தனம் செய்திருக்கின்றனர். ஜவாத் உள்ளேதான் இருந்தார்; வெளியில் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஜவாத்தை அவர்கள் தாக்கியிருக்கவும் கூடும். அப்படி நடந்திருந்தால், பதிலுக்கு ஜவாத்தின் ஆதரவாளர்கள் கல்முனையில் காணும் சாய்ந்தமருதுக்காரர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிமன்றம் கிடைப்பதை ஜவாத் தடுத்து வருகிறார் என்கிற வாதத்தை முன்வைத்துத்தான், ஜவாத்தை இவர்கள் தாக்குவதற்குச் சென்றிருக்கின்றனர். தங்கள் கோரிக்கையினை அங்கீகரிக்காதவர்களை அல்லது அதற்கு எதிராகச் செயற்படுபவர்களை தாக்குவதென்பது வன்முறையாகும். அதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை எதிர்ப்பவர்களை, தமது பக்கமாக அணைத்தெடுப்பதற்கு சாய்ந்மருது மக்கள் முயற்சிக்க வேண்டும். அல்லது அவர்கள் போடும் தடைகளையெல்லாம் எதிர்த்து முன்னேறி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வென்றெடுக்க வேண்டும். அதனை விட்டு விட்டு, ‘எதிர்ப்பவர்களுக்கெல்லாம் அடிப்போம்’ என்று இறங்கினால், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கையும் அதனை முன்னெடுப்பவர்களும் எதிர்ப்புகளையும் கசப்புகளையும்தான் அதிகமதிகம் சம்பாதிக்க நேரிடும்.

நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் சென்று கொண்டிருந்த சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான போராட்டம், பிழையான திசைக்குத் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகம் உடனடிக் கவனம் எடுக்க வேண்டும்.

“எங்களுக்குத் தெரியாமல் ஒரு சிறு கூட்டம் இப்படிச் செய்து விட்டது” என்று, இது விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகத்தார் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பிக்க முடியாது.

வன்முறைகளைக் கையில் எடுத்தவர்கள், வெற்றி பெற்றது கிடையாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்