கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம்

🕔 November 22, 2017

 அஷ்ரப் ஏ சமத் –

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை  நான்கு உள்ளுராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் போது, அவற்றுக்கான எல்லைகளை தீர்மானிப்பது தொடர்பிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தனின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காக பிரிப்பதற்கு, ஏற்கனவே முஸ்லிம் மற்றும் தமிழர் தரப்பு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் மற்றும் தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை  நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதற்கு இணங்கியிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், கோடீஸ்வரன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி, வை.எம்.எம்.ஏ. தலைவர் நபீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசம் நான்கு உள்ளுராட்சி சபைகளாக பிரிக்கப்படும் போது, அவற்றின் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலான தமிழர் தரப்பு முன்மொழிவு ஆவணங்கள், இன்றைய சந்திப்பின்போது மு.கா. தலைவர் ஹக்கீமிடம் தமிழர்கள் சார்பாகக் கையளிக்கப்பட்டது.

அதேபோன்று, முஸ்லிம்கள் சார்பான முன்மொழிவு ஆவணங்கள், ரா. சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இடம்பெற்ற சந்திப்பில், எந்தவிதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

எனவே, இன்று வருகை தந்தவர்களுடன், கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் தமிழர் மகாசபை பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு, டிசம்பர் 10ஆம் திகதியன்று ஒரு சந்திப்பை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்