அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

🕔 November 22, 2017

பிணை முறிகள் தொடர்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தமை, அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபர் அர்ஜுன் அலோசியசுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தொலைபேசி மூலம் உரையாடி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோப் குழுவின் அங்கத்தவர்கள் சிலரே, அலோசியசுடன் பேசி வந்துள்ளனர். அவர்களில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் ஒருவராவார்.

இந்த நிலையிலேயே, பிணை முறி தொடர்பில் – தான் எழுதிய புத்தகமொன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியதாக சுஜீவ தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சுஜீவ எழுதிய அந்தப் புத்தகமானது 24 ஜுலை 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 07 ஜுலை 2016ஆம் ஆண்டு, அதாவது புத்தகம் வெளியிடப்பட்டு 349 நாட்களுக்குப் பின்னர், கோப் குழுவின் அங்கத்தவராக சுஜீவ நியமிக்கப்பட்டார்.

இந்த கால கட்டத்தில்தான் ராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும், அர்ஜுன் அலோசியசுக்குமிடையில் 62 தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றுள்ளதாக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. அந்த தொலைபேசி உரையாடல்கள் 06 மே 2016ஆம் ஆண்டுக்கும் 28 ஒக்டோபர் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.

எனவே, சுஜீவ எழுதிய புத்தகம் வெளியாகி ஒரு வருட காலத்தின் பிறகுதான், அர்ஜுன் அலோசியசுடன் 62 முறை அவர் தொலைபேசி வழியாகப் பேசியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சுஜீவ வெளியிட்ட புத்தகத்தின் ஐ.எஸ்.பி.என். இலக்கத்தைக் குறிப்பிட்டு, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பொய்யை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்