சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு

🕔 November 15, 2017

சிம்பாவே நாட்டின் ஆட்சியினை அந்நாட்டு ராணுவம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ரொபர் முகாபே பாதுகாப்பாக உள்ளார் என, ராணுவம் அறிவித்துள்ளது.

முதலில் சிப்பாவே ராணுவத்தினர் அரச தொலைக்காட்சியை கைப்பற்றியதாக தெரிய வருகிறது. இதனையடுத்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்தார். இதன்போது அவர் கூறுகையில்; இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என்றும், ஜனாதிபதி முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னணி

1980 ஆம் ஆண்டு முதல் – சிம்பாவேயின் ஜனாதிபதியாக ரொபட் முகாபே பதவி வகித்து வருகின்றார்.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கடுமையான எதிர்ப்பினை சம்பாதித்துள்ள 93 வயதான முகாபே, ஒரு சர்வதிகாரியாக வர்ணிக்கப்படுகிறார்.

ஜனாதிபதி ரொபர் முகாபேயின் ‘சானு பி.எஃப்’ எனும் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையினை அடுத்தே, இந்த ராணுவப் புரட்சி வெடித்துள்ளது.

நாட்டின் உப ஜனாதிபதி மனன்காக்வேயை அவரின் பதவியிலிருந்து ஜனாதிபதி ரொபட் முகாபே அண்மையில் நீக்கியிருந்தார். சிம்பாவேயின் அடுத்த ஜனாதிபதியாகுவதற்கான சந்தர்ப்பம் இவருக்கே அதிகம் இருந்தது.

இந்த நிலையில், துணை ஜனாதிபதியாக தனது மனைவி கிரேஸை நியமிப்பதற்கு  முகாபே தீர்மானித்ததாகவும் கூறப்படுகிறது,

ராணும் எதிர்ப்பு

உப ஜனாதிபதியை நீக்கியதையடுத்து, ஜனாதிபதி முகாபேக்கு ராணுவத் தளபதி சிவென்கா சவால் விடுத்திருந்தார்.

ஜனாதிபதி முகாபேவின் ‘சானு பி.எஃப்’ கட்சியில் இருப்பவர்கள், களை எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு ராணுவம் தயாராக உள்ளதாகவும் ராணுவ தளபதி சிவென்கா கூறியிருந்தார்.

இது இவ்வாறிருக்க சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை, தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக, அரச தொலைக்காட்சியில் தோன்றிய  ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

நிலைவரம்

இதேவேளை தலைநகர் ஹராரேயின் வடக்கு புறநகர் பகுதியில், கடுமையான துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்கள் கேட்டுள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி முகாபே தரப்பிலிருந்து இதுவரையில் எதுவித அறிக்கைகளும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, நாட்டின் அதிகாரத்தில் ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராணுவ தளபதி மீது – சிம்பாவேயின் ஆளுங்கட்சி ‘துரோக’ குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்