பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

🕔 November 12, 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  உயர்பீடக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலேயே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பொத்துவில் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். வாஸித் துணிச்சலுடன் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

“உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களும் பொத்துவிலுக்கும் செல்ல வேண்டும்” என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உயர்பீட கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் போது எழுந்த வாஸித்; “எங்களின் ஊருக்கு எம்.பி.யும் இல்லை, மாகாண சபை உறுப்பினர்களும் இல்லை. இந்த நிலையில், அவரவர் ஊருக்கு அந்தந்த எம்.பி.மாரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நிலையில், பொத்துவிலுக்கு கட்சியின் அமைப்பாளராக நான் இருக்கும் போது, ஏன் வேறு ஊர்களிலிருந்து இங்கு ஆட்களை  அனுப்ப வேண்டும்” எனக்  கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது எழுந்த பிரதியமைச்சர் பைசால் காசிம்; பொத்துவிலுக்கு தான் வரப் போதில்லை எனத் தெரிவித்ததாக அறிய முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் வாசிதை தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

“தேர்தலுக்காக பொத்துவிலுக்கு கட்சித் தலைவர் வந்தால் போதும். எம்.பி.களோ மற்றவர்களோ வரத் தேவையில்லை. பொத்துவில் பிரதேச சபையை நான்  வென்று தருவேன் என உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்தேன்” என, வாசித் கூறினார்.

இதன்போதே பிரதியமைச்சர் பைசல் காசிம்  எழுந்து; தான் அட்டாளைச்சேனைக்கும் பொத்துவிலுக்கும் செல்லமாட்டேன் எனத் தெரிவித்தாகவும்,  வாஸித் நமக்கு தெரிவித்தார்.

“அடுத்த தேர்தலுக்காக ஒவ்வொருவரும் இப்போதிருந்தே புரோக்கர்களைப் போடுகின்றனர். அந்த புரோக்கர்கள் எங்களுக்குச் சரிவராது. எங்களது ஊரை ஆளும் சக்தி எங்களுக்கு வேண்டும். இல்லாவிட்டால், நான் ஏன் அமைப்பாளராக இருக்க வேண்டும் எனவும், இதன்போது  வாஸித் நம்மிடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்