ராஜிவ் காந்தியை தாக்கிய விஜேமுனிக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் அங்கத்துவம்

🕔 November 9, 2017

– அஹமட் –

ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை வந்திருந்த போது, அவரைத் தாக்கிய அப்போதைய படை வீரரான விஜித ரோகன விஜேமுனி, மஹிந்த ராஜபக்ஷ அணியின் கட்சியான பொது ஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமிருந்து கட்சியின் அங்கத்துவத்தினை விஜேமுனி இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார்.

கடந்த முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விஜேமுனி, தனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளில், ராஜிவ் காந்தியை – தான் தாக்கிய காட்சியினை பெருமையுடன் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விஜித ரோகன விஜேமுனி  -ஒரு சோதிடராகவும் அறியப்படுகின்றார். நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 26ஆம் திகதியன்று இறந்து விடுவார் என்று, இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்வு கூறியிருந்தார்.

பின்னர், இதற்காக கடந்த ஜனவரி 31ஆம் திகதி வஜேமுனி கைது செய்யப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

1985ஆம் ஆண்டு 20 ஆவது வயதில் படையில்  சேர்ந்து கொண்ட விஜேமுனி, தனது 22 ஆவது வயதில் 1987ஆம் ஆண்டு, ராஜிவ் காந்தி மீது அந்தத் தாக்குதலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்