தாஜுத்தீன் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக, நல்லாட்சியில் நடக்கும் தில்லாலங்கடி; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் முஜீபுர் றஹ்மான்

🕔 November 8, 2017
ட்ட மா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றம்சாட்டினார்.
நல்லாட்சியை தாங்கள் உருவாக்கியது நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் என, இதன்போது கூறிய அவர்; றகர் வீரர் தாஜுத்தீனின் உடலத்தை வெளியே எடுத்தது, அவர் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் என்றும், தாஜுத்தீனின் உடலத்தைக காட்டி வாக்கு பெறுவதற்கல்ல எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் மேலும் தெரிவிக்கையில்;
“நாங்கள் இந்த நல்லாட்சியை உருவாக்கியது, நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்காகத்தான். தாஜுதீனின் உடலத்தை வெளியே எடுத்தது நீதியை நிலைநாட்டுவதற்கே அன்றி, தாஜுதீனின் உடலத்தைக் காட்டி வாக்கு பெறுவதற்கல்ல.

மஹிந்த ராஜபகஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தாஜுத்தீனின் படுகொலைக்கான காரணத்தை, நல்லாட்சி அரசாங்கம் வெளியே கொண்டு வந்து நீதியை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.
நல்லாட்சியின் நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கு உதாரணமாக, தாஜுத்தீனின்  படுகொலை தொடர்பான நீதி விசாரணைகள் இன்று மாறியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட தாஜுதீனின் உடலை, நாங்கள் 2015 ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளியே எடுத்தோம்.

தாஜுதீன் சார்பானவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்குவதாகக் கூறித்தான் அவரின் உடலை நாங்கள் வெளியே எடுத்தோம். இந்நாட்டு மக்கள் அனைவரும் தாஜுதீனுக்கு இழைக்கப்பட்ட அநீதி  தொடர்பாக கதைத்தனர். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர்.

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற இந்தக் கொலையை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது கொலையல்ல இது ஒரு விபத்து என்று மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது, அவற்றை தடுத்து – நடந்திருப்பது கொலை என்ற உண்மையை வெளியே கொண்டு வந்து உறுதிப்படுத்த எங்களால் முடியுமாக இருந்தது.

இன்று தாஜுதீனின் கொலை தொடர்பான செயற்பாடுகளில் மீண்டும் ஒரு சந்தேகமான நிலை உருவாகியிருக்கிறது. எமது கண்ணுக்கு புலப்படாத சக்தியொன்று தாஜுதீனின் கொலையை மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கொலை வழக்கின் விசாரணைகளின் போக்கைப் பார்க்கும் போது எமக்கு அந்த சந்தேகம் எழுகிறது.

இந்த வழக்கின் சந்தேக நபர்களாக பொலிஸ் அதிகாரி  அநுர சேனாநாயக்கவும், நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் உள்ளனர். குற்றவியல் சட்டத்தின் 297வது பிரிவின் கீழ் இவர்கள் இருவரும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். இந்தக் கொலையில் முக்கியமான சந்தேக நபராக பேசப்பட்ட நபர்தான்  ஆனந்த சமரசேகர என்ற சட்ட மருத்துவ அதிகாரி.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான இவர்தான் இந்த கொலை தொடர்பாக மருத்துவ அறிக்கையை வழங்கியவர். இது கொலையல்ல விபத்து என்று மருத்து அறிக்கை வழங்கியவர் இவர்தான். இவருக்கு கீழ் கடமையாற்றிய இரண்டு அதிகாரிகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முக்கியமான வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். ஆனந்த சமரசேகர என்ற இந்த சட்ட வைத்திய அதிகாரி,  இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் வாக்குமூலம் கொடுக்கும் விதம் பற்றி அழுத்தம் கொடுத்திருக்கின்றார். இது தொடர்பாக இந்த இரண்டு அதிகாரிகளும் தமது வாக்கு மூலத்தில் பதிந்தும் இருக்கின்றார்கள். ஆனால் ஆனந்த சமரசேகரவை கைது செய்யவில்லை.

அநுர சேனாநாயக்கவையும், நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் குற்றவியல் சட்டத்த்தின் 297 பிரிவின் கீழ் கைது செய்து ஒரு வருடமாக சிறையில் வைத்திருந்தவர்கள், இந்த வழக்கில் முக்கிய நபராக இருக்கும் ஆனந்த சமரசேகரவை கைது செய்து, ஒரே நாளில் பிணை வழங்கி வெளியே அனுப்பினார்கள். இது எப்படி முடியும்?

சட்டமா அதிபர் காரியாலயம் இந்த வழக்கு தொடர்பாக ஒழுங்கான உபதேசம் வழங்குவதில்லை. 2017.10.02 ம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தனர். குற்றவியல் சட்டத்தின் 198ம் பிரிவின் கீழ் சாட்சிகளை மறைத்த குற்றத்தின் பிரகாரம் ஆனந்த சமரசிங்கவை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரினார்கள். ஆனால் அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. ஆனால் 2017.10.19ம் திகதி ஆனந்த சமரசிங்க நீதி மன்றில் ஆஜராகி ஒரே நாளில் பிணை வழங்கப்பட்டு வெளியே செல்கிறார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சட்டமா அதிபர் காரியாலய அதிகாரிகள் நீதிமன்றுக்கு வருவதில்லை. குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஆரேலாசனை வழங்குவதில்லை. குற்றப்புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு வழக்கு தொடர்பாக அறிவித்தாலும் அவர்கள் நீதிமன்றிற்கு சமூகமளிப்பதில்லை. இதுதான் இன்றுள்ள பிரச்சினை. நாங்கள் இந்த நல்லாட்சியை உருவாக்கியது, நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்காகத்தான். சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நிலைநிறுத்துவதற்காகத்தான். தாஜுதீனின் உடலத்தை வெளியே எடுத்தது தாஜுதீன் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். மாறாக தாஜுதீனின் உடலத்தைக் காட்டி வாக்கு பெறுவதற்கல்ல.

ஆனந்த சமரசிங்க தன்னை கைது செய்வதை தடுக்கும் முகமாக, முன் பிணைகோரி நீதிமன்றங்களுக்குச் சென்றார். அவருக்கு முன் பிணை மறுக்கப்பட்டது. ஆனால் வியக்கத்தக்க விடயம் என்ன வென்றால், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே அவருக்கு பிணையை வழங்கியது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்