யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 21 லட்சத்துத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியிலிருந்து மேற்படி சந்தேக நபர், போலி நாணயத்தாள்களை அச்சிட்டு தனது பணத்தேவைக்கு பயன்படுத்த சில மாதங்களுக்கு முன்னர் முற்பட்டிருந்தார்.
எனினும் அதனை கடை உரிமையாளர் ஒருவர் அறிந்து கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். அதனடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்ய முற்பட்ட போதும் அவர் வீடுமாறி தலைமறைவாகியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று இன்றைய தினம் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 400, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 148 கைப்பற்றப்பட்டன.
அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிறின்டர், ஸ்கானர் மற்றும் மடி கணினி என்பனவும் மீட்கப்பட்டன.
பொலிஸார் அங்கு சென்றவேளை குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாதமையினால், அவருடைய மனைவி கைது செய்யப்பட்டார்.
பின்னர் பிரதான சந்தேக நபர் இன்றிரவு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இருவரும் நாளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய ராசலிங்கம் லபீசன், 19 வயதுடைய அவருடைய மனைவி கிருசாந்தி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.