சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நான் நம்புவதில்லை: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

🕔 November 6, 2017
– அஷ்ரப் ஏ சமத் –

சிங்கள அரசாங்கங்களையோ, தலைவர்களையோ தான் ஒருபோதும் நம்புவதில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சிங்கள அரசாங்கத்திடம் நாம் கேட்காமல் இருந்தால் எதையும் தரமாட்டா்கள். நாம் சும்மா இருந்தால் நம்மிடம் இருக்கின்றதையும் பிடுங்கி எடுத்துவிடுவாா்கள் எனவும் அவர் கூறினார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இல்ககிய மன்றத்தின் 29ஆவது ‘தமிழ் அருவி’ நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை ராமகிருஸ்ண மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்;

“நான் ஒருபோதும் சிங்கள தலைவர்களையோ, சிங்க அரசாங்கத்தினையோ நம்புவதில்லை. என்மீதுதான் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

அண்மையில் நுவரெலியாவில் 04 பிரதேச சபைகளை பெற்றெடுத்தோம். அவற்றினை நாங்கள் வெறுமனே பெற்றெடுக்கவில்லை. அதற்காக நான் போராடினேன்.  வெளிநடப்புச் செய்தேன்.  போராட்டம் நடத்தித்தான்  இச் சபைகளை  பெற்றோம்.

சிங்கள அரசிடம் நாம் கேட்காமல் இருந்தால் எதையும் தரமாட்டா்கள். நாம் சும்மா இருந்தால்  எம்மிடம் இருக்கின்றதையும் பிடுங்கி எடுத்துவிடுவாா்கள். இது தான் உண்மை.

தந்தை செல்வா தொடக்கம், இன்று வரை உள்ள தலைவா்கள் வரை, நாம்  ஏமாந்து தான் வருகின்றோம்.

அன்று சகல அதிகாரங்களையும்  வடக்கு கிழக்கு இணைப்புடன் வழங்குவதாகக் கூறியதை தமிழ்த் தலைவா்கள் ஏற்க மறுத்துள்ளாா்கள். தருவதை நாம் பெற்றுக் கொள்வதில்லை. காலம் செல்ல செல்ல, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிரப்படும் அரசியலமைப்பு குறித்தே பேசப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பு அல்லது மலையகத்தில் தமிழனுக்கு அடி விழும்போது கூட  எனக்கு வலிக்கிறது. அவர்களுக்காகவும் நான் குரல் கொடுப்பேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்