போதும் இனிப்போய் விடுங்கள்

🕔 November 3, 2017

– முஜீப் இப்றாஹிம் –

தினேழு வருடங்களாக
உங்கள் ‘நப்சு’ நாடியதை
நன்றாக அனுபவித்துவிட்டீர்கள்

போதும் இனிப் போய்விடுங்கள்

தலைவன் வீழ்ந்த போது
காலியான கதிரை
இது வரை உங்களை மிகுந்த வலியுடன்
சுமந்திருக்கிறது.

போதும் இனிப் போய்விடுங்கள்

அஸ்ரப் 14 ஆண்டுகள்
முன்னோக்கி நகர்த்திய சமூகத்தை
நீங்கள் 17 ஆண்டுகள்
பின்னோக்கி தள்ளிவிட்டீர்.

போதும் இனிப் போய்விடுங்கள்

மரத்தின் கோட்டைகளில்
உங்கள் கட்அவுட்டுகள் எரிகின்றன
ஆயிரம் விளக்குகளால் ஆன ஆதவனும்
சேர்ந்தே எரிகிறது.

போதும் இனிப் போய்விடுங்கள்

தீப்பிழம்பாய் மாறிக்கொண்டிருக்கும்
இளையோர் சமூகம்
தீட்சண்யமிக்க தலைவர்களை
நாடி நிற்கிறது.
ஆகையினால் கெளரவமாய் வழிவிட்டு…

போதும் இனிப் போய்விடுங்கள்

உங்கள் நாற்காலியை
அவர்கள் கொத்தி எறியும் வரை
உங்கள் பிடரி பிடித்து
அவர்கள் இழுத்து வீசும் வரை
காத்திராமல்…

போதும் இனிப் போய்விடுங்கள்.

உங்கள் பாவங்களுக்கான
‘தவ்பா’வை செய்யவும்
நீங்கள் சமூகத்திற்கு செய்த
பாவங்களுக்கான ‘தவ்பா’வை செய்யவும்
நேரம் நெருங்கிவிட்டது…

போதும் இனிப் போய்விடுங்கள்

போகும் போது
தாருஸ்ஸலாமை இறுகப்பூட்டி
சாவியை
பக்கத்து பெட்டிக்கடைக்காரியிடம்
கொடுத்து விட்டுப்போங்கள்.

அவளுக்குத்தெரியும்
அதை யாரிடம் கொடுக்கவேண்டும் என்று.

##

*நப்சு – மனசு
*தவ்பா- பாவமன்னிப்பு

*பெட்டிக்கடைக்காரி :- தாருஸ்ஸலாம் கட்டத்தொடங்கிய காலத்திருந்தே இவளது அம்மா அங்கே கடைவைத்திருந்தாள்.

யார் இருந்து ஆண்ட இடமது, இப்போது யார் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதும், யாரிடம் அதன் சாவி சென்று சேரவேண்டுமென்பதும், அந்த பெட்டிக்கடைக்காரியைப்போல – சாதாரணமானவர்களுக்கு நன்கு தெரியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்