ஆப்பின் கூரிய முனை

🕔 October 31, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும்.

அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது.

1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அதில் கலந்து கொண்டனர். அதன் மூலம், தமது உரிமையை வென்றெடுத்தனர்.

துருக்கித் தொப்பி போராட்டம் குறித்து எழுதியுள்ளவர்கள், அதன் கனதியை வியந்து குறிப்பிட்டுள்ளனர். ‘துருக்கித் தொப்பிக்கான போராட்டமானது, முழு முஸ்லிம் சமுதாயத்தையும் ஒற்றுமையாக செயற்படத் தூண்டியது. முஸ்லிம் சமூகத்தின், எல்லாத் தலைவர்களையும் ஒரே மேடையில் தோன்ற வைத்தது. அதற்கு முன்னரோ அல்லது அதன் பின்னரோ முஸ்லிம் சமுதாயமானது தன்னைப் பாதிக்கும் ஒரு கருமத்துக்காக, அவ்விதமான ஒரு சக்தியையும் ஒற்றுமையையும் காட்டவேயில்லை’ என்று, துருக்கித் தொப்பி போராட்டம் குறித்து பிற்காலத்தில் எழுதியுள்ள எம்.எம். தௌபீக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

தொப்பியும் உரிமையும்  

1905ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சீ.பி. லெயாட் என்பவர், வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் சட்டத்தரணி எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்தவராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சார்பாக வாதிட எழுந்தார். அதைக் கண்ட நீதிபதி, ‘துருக்கித் தொப்பியணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கிறீர். இந்த வழக்கை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதுவரை கடைப்பிடிக்கப்படும் விதிகளுக்கமைய நீர் நடக்கத் தவறினால், உமது வாதத்தை, நான் செவிமடுக்க மாட்டேன்’ என்றார்.

சட்டத்தரணி காதர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர், சற்று அதிர்ந்துதான் போனார். ஆயினும், தனது பக்க நியாயத்தை அவர் வெளிப்படுத்தினார். “துருக்கித் தொப்பியணிந்து ஆஜராகுவதன் மூலம், எதுவித அவமதிப்பையும் புரிவதற்கு நான் எண்ணவில்லை. இது எனது மதத்துக்கமைய பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்” என்று சட்டத்தரணி காதர் விளக்கமளித்தார்.

ஆனால் நீதிபதி லெயாட், அதை ஏற்கவில்லை; பிடிவாதமாக இருந்தார். மறுபக்கமாக சட்டத்தரணி காதரும் தனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்ற மறுத்துவிட்டதோடு, நீதிமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர், நீதிமன்றத்தில் துருக்கித் தொப்பியணிந்து ஆஜராகுவதைத் தடை செய்யும் உயர் நீதிமன்ற நிகழ்ச்சிக் குறிப்பு, 1905ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வெளியானது.

இந்தச் சம்பவங்களை அடுத்து, ஆரம்பித்ததுதான் துருக்கித் தொப்பிப் போராட்டமாகும். முஸ்லிம் சமூகம், சகல வேறுபாடுகளையும் மறந்து, ஒன்றுபட்டு, பல மாதங்களாக, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.

இதன்போது, ‘துருக்கித் தொப்பிக் குழு’ ஒன்றும் அமைக்கப்பட்டது. அதில் மாக்கன் மாக்கார் உள்ளிட்ட 21 பெரியார்கள் அங்கம் வகித்தனர். துருக்கித் தொப்பியை நீதிமன்றில் அணிவதற்கு அனுமதிக்கக் கோரி சட்ட ரீதியாகவும், சாத்வீக வழியிலும் முஸ்லிம்கள் தமது போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனர். மருதானைப் பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, புகழ்பெற்ற முஸ்லிம் சட்டத்தரணிகள் வெளிநாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின் இறுதியில், துருக்கித் தொப்பிக்கு எதிராக, நீதிபதி லெயாட் வழங்கிய உத்தரவு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில், முஸ்லிம் சட்டத்தரணிகள் துருக்கித் தொப்பியணிந்து ஆஜராவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

அச்சத்தின் வெளிப்பாடு  

இப்போது இந்த இடத்தில் சிலருக்கு ஒரு கேள்வி எழக்கூடும். ஒரு தொப்பிக்காக இப்படியொரு போராட்டம் தேவைதானா என்று யாரேனும் யோசிக்கலாம். மிகக் கூர்ந்து நோக்கினால், உண்மையில் இது தொப்பிக்கான போராட்டமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தங்கள் மீது திணிக்கப்படவிருக்கும் கட்டுப்பாடுகளில் இந்தத் தடையானது முதலாவதாக அமைந்து விடலாம் என, முஸ்லிம் சமுதாயம் அச்சப்பட்டமையின் வெளிப்பாடுதான் துருக்கித் தொப்பி போராட்டமாகும்.

இதைப் படிக்கும்போது, ஆச்சரியமாக இல்லையா? தொப்பி அணிவதைத் தடுத்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம் சமூகம் வெகுண்டெழுந்திருக்கிறது. ஆனால், இப்போது எதை இழந்தாலும் அலட்டிக் கொள்ளாத சொரணையற்றவர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாறிப்போயிருப்பதைக் காணும் போது கவலையாகவும் கோபமாகவும் உள்ளது.

துருக்கித் தொப்பி போராட்டத்தின், மருதானைப் பள்ளிவாசல் பொதுக்கூட்டத்தின்போது, நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்ட ஒரு விடயம் மிகவும் அவதானத்துக்குரியதாகும். ‘முஸ்ஸிம் சட்டத்தரணியொருவர், தொப்பி அணிவதற்கு எதிராக நீதிமன்றினால் இடப்பட்ட கட்டளையானது, ஆப்பின் கூரிய முனையாகும் என்ற அச்சத்துடன் நோக்க வேண்டியுள்ளது. அக்கட்டளையானது உறுதிப்படுத்தப்பட்டால், முஸ்லிம்கள் பொது இடங்களிலும் வைபவங்களிலும் தங்கள் தலையை மூடும் உரிமையை மறுக்கும் கட்டளைத் தொடரில், இது முதலாவதாக அமையக் கூடும்’ என்று அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலெழும் சந்தேகம்  

முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக, அந்தச் சமூகத்தின் முன்னோர்கள் இவ்வாறு போராடிப் பெற்றெடுத்த பல உரிமைகளை, இப்போதுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வெகு அலட்சியமாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் முஸ்லிம் சமூகம் மத்தியில் உள்ளன.
துருக்கித் தொப்பிப் போராட்டப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட, ‘ஆப்பின் கூரிய முனை’யில், முஸ்லிம் சமூகத்தை அதன் அரசியல் தலைவர்கள் அழுத்தமாக இருத்தி விட்டார்களோ என்கிற சந்தேகம் இதனூடாக மேலெழுகிறது.

அண்மையில், அரசாங்கம் நிறைவேற்றியுள்ள மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை உள்ளிட்ட பல விடயங்கள், முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானது என்றும் சாதகமற்றவையாக உள்ளன எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம்கள் மாகாணசபைகளுக்குத் தெரிவாகுவதில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்பதை மிக நன்றாகத் தெரிந்து கொண்டே, நாடாளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் உறுப்பினர்களும் அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையை என்ன கணக்கில் எழுதுவதென்று புரியவேயில்லை.

தவறு என்று தெரிந்து கொண்டே அதற்கு ஆதரவாகச் செயற்படுவதும், பின்னர் வந்து, கண்களைத் திறந்து கொண்டு குழியில் விழுந்து விட்டோம் என்று கூறுவதும், தவறு நடந்து விட்டது என்று வருத்தப்படுவதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு வாடிக்கையாகும்.

இதேவேளை, புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கையிலும் முஸ்லிம்களுக்குப் பாதிப்பாக அமையக் கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளன என்றும் முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அவை அவ்வாறிருக்கத் தக்கதாகவே, புதிய அரசியல் யாப்புக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவை வழங்கி விடுவார்களோ என்கிற பயமும் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. எனவே, மேற்சொன்ன விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு, முஸ்லிம்களைப் பாதிக்கும் விடயங்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றபோதும், இதுவரை அது நடக்கவில்லை.

பாலமுனைப் பிரகடனம்  

இவ்வாறானதொரு நிலையில்தான், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, தற்போதுள்ள அரசியல் விவகாரங்களை முன்வைத்து ‘பாலமுனைப் பிரகடனம்’ எனும் பெயரில், சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதோடு, அவற்றை அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை, பெருந்தொகையான சனத் திரளுக்கு முன்னிலையில், தேசிய காங்கிரஸின் ‘பாலமுனைப் பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டது.

அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள கணிசமான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தின் விருப்பங்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் இறுதியில், தேசிய காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், ‘பாலமுனை பிரகடனத்தை’ வாசித்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் – அந்த பிரகடனத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

மேற்படி பிரகடன நிகழ்வில், தேசிய காங்கிரஸின் 05 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. அவை:
1. அரசமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தல்.

2. எனவே, அரசாங்கத்தின் இடைகால அறிக்கை மீளப்பெறப்பட வேண்டும். அது எவ்வகையிலும் சட்டமாக்கப்படக் கூடாது. எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமையொன்றைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டின் மூவினத்தினதும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்து பேசி, தற்போதைய நமது அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மாத்திரம் செய்து, அவற்றைச் சாத்தியப்படுத்த முடியும்.

3. புதிய திருத்தங்களாக பின்வரும் விடயங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
இன, மத, மொழி நல்லிணக்கம் தொடர்பான விசேட ஏற்பாடுகள்.

சிறுபான்மை மக்களின் உரிமை, நலன், பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைளும் பாரபட்சமாக கருதப்படலாகாது.

சிறுபான்மை மக்களுக்கு ஆகக்குறைந்தது, மாவட்ட இன விகிதாசார அடிப்படையிலான காணி உள்ளிட்ட வளப் பகிர்வு

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தற்போதைய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, சகல நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள இன, மத, மொழி பரம்பல் விகிதாசாரத்துக்கு அமைவாக, அங்குள்ள பெரும்பான்மைக்கு அந்தந்த மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.

இனங்களுக்கிடையிலான குரோதப் பேச்சுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்.
சட்டங்களின் நீதிமுறை மீளாய்வு.

 பொதுநல அக்கறை. வழக்காடலுரிமை.

மக்களுக்கு அருகில் அதிகாரம் கொண்டுவரப்பட்டு, உள்ளூராட்சி அதிகார சபைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். காணிச் சட்டம், ஒழுங்கு விவகாரங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகளின் இணக்கங்களோடு அமுல்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.

சிறுபான்மை மக்களின் உரிமை, நலன், பாதுகாப்பு தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள், சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்படக் கூடாது.

4. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற முறைமைக்கு புறம்பாக நிறைவேற்றப்பட்டதாலும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதாலும், அந்தச் சட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும்.

5. சிறுபான்மை மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும்.

அதாவுல்லா: பிழையும், சரியும்  

பாலமுனைப் பிரகடனத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட மேற்படி தீர்மானங்களில் கணிசமானவை முஸ்லிம் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன என்று, மேலே நாம் குறிப்பிட்டுள்ளபோதும், அதனை அவ்வாறு வெளிக்காட்டுவதற்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தவறி விட்டார் என்கிற விமர்சனமொன்றும் முன்வைக்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சப்படுகின்ற விவகாரங்களுக்கு தீர்வை நாடி மேற்கொள்ளப்பட்ட பாலமுனைப் பிரகடனத்தில், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முக்கியமான சிவில் அமைப்புகளை இணைத்துக் கொள்ளாமல், இந்த விடயத்தில் அதாவுல்லா ‘வன் மேன் ஷோ’ காட்டியிருப்பது, பாலமுனைப் பிரகடனத்திலுள்ள பாரிய குறைபாடாகும்.

அதனால், பாலமுனைப் பிரகடனம் – அதாவுல்லாவின் அரசியல் செயற்பாடாகத் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதற்கும், அதற்காக போராட்டங்களை நடத்துவற்காகவேனும், ஓரணியாக இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தயாராக இல்லை என்பதற்கு, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் ‘பாலமுனை பிரகடனம்’ – ஒரு கசப்பான உதாரணமாக இருக்கிறது.

இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் தீர்மானமாக இருந்திருக்க வேண்டிய பாலமுனைப் பிரகடனத்தை, தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் கோசமாக அதாவுல்லா மாற்றி விட்டார் என்கிற குற்றச்சாட்டை இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது.

இன்னொருபுறமாக பார்க்கையில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மக்களைப் பொதுவெளிக்குத் திரட்டி வந்து பேசுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தயாரற்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதாவுல்லா இதைச்  செய்திருக்கிறார்.

‘ஆப்பின் கூரிய முனை’யில் அமர வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம், ஆபத்துகளின்றிக் காப்பாற்றப்படுவதற்கான செயற்பாடுகள், துருக்கித் தொப்பிப் போராட்டம் போன்று ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும்.

அவ்வாறான போராட்டங்கள்தான் வெற்றி பெறும்.

நன்றி: தமிழ் மிரர் (31 ஒக்டோபர் 2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்