சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா

🕔 October 30, 2017

– எம்.வை. அமீர்-

யாருக்கும் அநீதி இழைப்பதற்காகவோ எவருடைய உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை மக்கள் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமரு ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்;

“திரண்டுள்ள மக்கள் வெள்ளம் சாய்ந்தமருதில் வரலாறு ஒன்றைப் படைக்கின்றது. இந்தமக்கள் கூட்டம் – அவர்களை, அவர்களே ஆழ வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களுக்கு என தனியானதொரு உள்ளுராட்சி சபையைக் கோரியே இங்கு திரண்டுள்ளனர். ஜனநாயகமான இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காய், சாய்ந்தமருது பள்ளிவாசல் 40 க்கு மேற்பட்ட உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது. இந்த சந்திப்புக்களில் பல்வேறு தரப்பினராலும் உத்தரவாதங்கள் தரப்பட்டபோதிலும் அவை எதுவும் நிறைவேறுவதாக இல்லை.

காலத்தை இழுத்தடிக்கும் நிகழ்வுகளே இடம்பெறுவகின்றன. தொடர்ந்தும் ஏமாறுவற்கு நாங்கள் தயாரில்லை. எங்களுக்கு நியாயம்கோரி, சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம். நோன்பு நோற்று இறைவனிடம் பிராத்திக்கப் போகிறோம்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபைக் கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல. இது பலவருடங்களாக முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் நிறைவேற்றித் தருவதாக கூறியிருந்தனர். இலங்கையில் பிரதேச செயலகத்தைக் கொண்ட ஒரு பிரதேசத்துக்கு,  உள்ளுராட்சிசபை இல்லாமலிப்பது, சாய்ந்தமருதுதான். சிறிய சிறிய ஊர்களுக்கும் பிரதேச சபைகள் இருக்கின்றபோதிலும், இந்த பெரிய ஊருக்கு உள்ளுராட்சிசபை இல்லாதது கவலையானதும் அநீதியானதுமான விடயமாகும்.

கடந்த காலங்களில் பச்சை – மஞ்சள் மற்றும் பச்சை – நீலக் கொடிகளை அரசியல்வாதிகளுக்காக கட்டிய இளைஞர்களே இப்போது கறுப்புக்கொடிகளைக் கட்டியுள்ளனர். இளைஞர்களது பலத்தை அரசியல்வாதிகளுக்கு நான், கூறவேண்டியதில்லை.

சாய்ந்தமருது மக்களின் உள்ளக்குமுறல்களை அரசாங்கத்தினரும் அரசியல்வாதிகளும் உதாசீனம் செய்துள்ளனர். எங்களின் கோரிக்கைக்கு விரைந்து நிவாரணமளிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்