அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு

🕔 October 29, 2017

– க. கிஷாந்தன் –

நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உறுதியளிக்கப்பட்டதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில் பயம் கொண்டுள்ளனர். ஆனால் நாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. மஹிந்தவும், மைத்திரிம் இது தொடர்பில் பேசியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

வட்டகொட மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு நேற்று மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய அரசாங்கத்தினர் சந்தித்த போது 13 மற்றும் 13 பிளஸ் தொடர்பிலும் பேசினார்கள். அதேபோல் முன்னைய ஆட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் இதே எதிர்பார்ப்பை வழங்கினர். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்று தேவை என்பதே உண்மை. அந்த அரசியல் யாப்பில் பெரும்பான்மையினரின் கருத்துக்களே உள்ளடக்கப்பட வேண்டும். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஆகவே இது தொடர்பில் தற்போது தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை நாம் கேட்டு வருகின்றோமே தவிர, அவற்றை அங்கிகரீக்கவில்லை. இந்த நிலையில் சிலர் இது தொடர்பில் குழப்பமடைந்துள்ளனர்.

எனவே ஒவ்வொரு இனத்தவரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்க கடும் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.

எனவே புதிய அரசியல் யாப்பின் ஊடாக வெவ்வேறான குழுக்களாக பிரியாமல் ஒன்றிணைந்து சக்திமிக்க இலங்கையில் முன்னோக்கி பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். ஆகவே இதனை குறுகிய சிந்தனையோடு பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்