கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

🕔 October 28, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தவர்களுக்கு – அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே ஆசிரியர் நியனமத்தை வழங்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களின்போது, வெளி மாகாணங்களில் நியமனம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களையும், ஏனைய மாகாண ஆசிரியர்களையும் அவர்களுடைய சொந்த மாகாணங்களில் இடமாற்றம் செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்டாரில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் தாராளமாகவுள்ள நிலையில், அவை நிரப்பப்படாமல் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறு நியமனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் சொந்த மாகாணங்களை விட்டு வேறு மாகாணங்களுக்கு செல்லும்போது, பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணங்களில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

Comments