மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

🕔 October 28, 2017

– பசீர் சேகுதாவூத் –

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது.

மஹிந்த காலத்து நன்மை

கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை மற்றும் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட வட்டாரங்களாக இருந்தன. இந்த எல்லை நிர்ணயம் முஸ்லிம்களின் உள்ளூராட்சி அரசியல் அதிகாரத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. இந்த 1000 வட்டாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லையிடப்பட்டிருந்தன. மேலும் அம்முறைமை தோல்வியடையும் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த ஏற்பாட்டினால், வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் வளரவும் நிலைக்கவும் வழிவகை இருந்தது.

நல்லாட்சியினரின் பொய்

தற்போது நல்லாட்சி அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரத் தேர்தல் முறையில் 167 இரட்டை அங்கத்தவர் வட்டாரங்களும் 4 மூன்று அங்கத்தவர் வட்டாரங்களும் மாத்திரமே அடங்கியுள்ளன. 60 : 40 என்ற தேர்தல் முறைமையில், தொகுதி மற்றும் வீதாசார அடிப்படையிலான தெரிவுகள் இருப்பதால் சிறுபான்மையினருக்கு நீதி செய்யப்பட்டுள்ளதாகப் பொய்யுரைக்கப்படுகிறது.

இம்முறையினால் அதிகம் நன்மை பெறப் போவது பெருந்தேசியக் கட்சிகளே ஆகும். ஏனெனில் தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குப் பெற்ற கட்சிக்குப் பிரதிதிதித்துவம் ( Best looser system) கிடைக்கும் முறை நீக்கப்பட்டு, அதிக வாக்குகள் பெறும் கட்சிகள் தாம் பெற்ற வாக்குகளுக்கு அமைவாக 40 வீத வீதாசாரப் பிரதிநிதித்துவத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முறையினால் வடக்கு கிழக்குக்கு வெளியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் படுகொலை செய்யப்பட்டு, பெருந்தேசியக் கட்சிகளே வீக்கம் அடையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முன்னர் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையும், எல்லை நிர்ணயமும் கடந்த அரசாங்கத்துக்கும்,சுதந்திரக் கட்சிக்கும் சாதகமாக அமைந்திருந்தது என்று கூறி முஸ்லிம் மக்களது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புதிய அரசாங்கம், புதிய முறையைக் கொண்டுவந்து சாதித்துக் கொண்டது. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வழமைபோல் வாழாதிருந்தனர்.சிறுபான்மை மக்களும் மஹிந்த அரசில் குற்றம் சுமத்தினால் அசமந்தமாக இருக்கப் பழகிக் கொண்டனர்.

இழக்கப் போகும் பிரதிநிதித்துவம்

மேற்சொன்ன அனுபவத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் மாகாணசபைகளுக்கான புதிய எல்லை நிர்ணயத்தையும் நோக்கவேண்டியுள்ளது.ஏற்கனவே மாகாண எல்லை நிர்ணயத்துக்குத் தரப்பட்டுள்ள வழிகாட்டலைப் பார்த்தால் மாகாண சபைகளில் ஏற்கனவே இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக மோசமாகக் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கில் முஸ்லிம்கள் வசம் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப பரந்த நிலப்பரப்பு கிடையாது. வழிகாட்டலில் தரப்பட்டுள்ள ஒரு தொகுதிக்கு இருக்கவேண்டிய மக்கள் தொகைப்படி பார்த்தால் தற்போதிருக்கும் வீதாசாரத் தேர்தல் முறை மூலம் கிடைக்கும் முஸ்லிம் உறுப்பினர் தொகை புதிய தேர்தல் முறை மூலம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு தொகுதிக்குரிய மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் நிலப்பரப்பின் அடிப்படையில் தமக்கு கிடைக்க வேண்டிய உறுப்பினர் தொகையை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இந்த வாய்ப்பு கிழக்கு முஸ்லிம்களுக்குக் கிடையாது.

மாகாண சபைத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வாய்ப்பிருந்தும் செய்யத் தவறிய தலைமைகள் முஸ்லிம் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு தாம் தொகுதி முறையை 50℅ மாகவும் வீதாசார முறையை 50 ℅ என்றும் திருத்தியமை முஸ்லிம்களுக்குச் சாதகமானது என்று சொல்வதில் எவ்வித உண்மையுமில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டால் மாத்திரமே இத்திருத்தத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். ஆனால் இது நடக்கும் என்று தற்போதைக்கு நம்ப முடியவில்லை.

பெரிய கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லை நிர்ணயத்தில் நடந்து கொண்டதைப் போன்றே, மாகாணசபைத் தொகுதி எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றன.

சாவு மணி

எதிர்வரும் 02 ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை முடிவடையும் முன்னர் சிபாரிசுகளைச் செய்வதற்கு முஸ்லிம் புத்தி ஜீவிகள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆலோசனையோ, சிபாரிசோ – தரப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகத்தானே இருக்கலாம். இவ்வழிகாட்டலை மீறி என்னதான் சிபாரிசைச் செய்தாலும் அவை உதவாதவையாக தூக்கி வீசப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார எல்லை நிர்ணயம் முடிந்த கையோடு வட கிழக்குக்கு வெளியில் முஸ்லிம்களுக்கு நடந்தது போன்று – மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் முடிவடைந்ததும் கிழக்கிலும் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடும்.

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் எந்தத் தேர்தலிலிலும் தனித்துவக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவது மிக்க கடினமானது. முஸ்லிம்கள் சிங்களத் தேசியக் கட்சிகளில் அல்லது தமிழ்த் தேசியக் கட்சியில் தஞ்சமடையும் நிலை தோன்றலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்