பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

🕔 October 26, 2017
– யூ. எல்.எம். றியாஸ் –

பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கையினை முன்வைத்து நேற்று புதன்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் மேலும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து, பொத்துவில் பிரதேச மக்களும், பொத்துவில் புத்தி ஜீவிகள் ஒன்றியமும் இணைந்து  நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் உப கல்வி வலயத்தில் உள்ள 21 பாடசாலைகளில் கல்வி கற்பிக்க 436 ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில், 286 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீடசையை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை ஆசிரிய இடமாற்றங்கள் ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக இடம்பெறுவதாகவும் அண்மையில் இவ் உப கல்வி வலயத்தில் கடமையாற்றிய 39 ஆசிரியர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்