உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல்

🕔 October 18, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

ள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனான இக்கலந்துரையாடலின்போது, கட்சியின் ஆதரவுத்தளங்கள் அதிகம் காணப்படும் இடங்களிலும் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை மக்கள் சிதறிவாழும் இடங்களிலும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்புகளுக்கான சாதகமான நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது. அத்துடன், மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் செவிமடுத்த ரவூப் ஹக்கீம், பிரஸ்தாப தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

தேர்தலுக்கான முன்னெடுப்புகளை பிரதான அரசியல் கட்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில்,  கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்திலும் ஏனைய சில மாவட்டங்களிலும் கொழும்பிலும், கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருவதோடு, கட்சியின் மேல்மட்ட முக்கியஸ்தர்களோடும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்