சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

🕔 August 6, 2015

Hasan Ali - 095
– எம்.வை. அமீர் –


‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில் மு.காங்கிரசின்  இளைஞர் மாநாடொன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09 ஆம் திகதி) சம்மாந்துறையில் நடைபெறவுள்ளதாக, மு.காங்கிரசின் செயலாளரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

மேற்படி மாநாடு தொடர்பில் தெளிவூட்டும், ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

மு.காங்கிரசின் ஒரு பிரிவான – இளைஞர் காங்கிரசின் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, மு.கா. செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 2000 ஆயிரம் இளைஞர்களை ஒன்று திரட்டி, நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளதாக ஹசனலி குறிப்பிட்டார்.

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் இளைஞர்கள்தான். முஸ்லிம்களின் அபிலாசைகளை அடைவதில் முன்னிலையில் திகழும், மு.காங்கிரஸ் எனும் இந்த இயக்கத்துக்கு, இளைஞர்களின் சக்தி இன்றியமையாததாகும். இதேவேளை, முஸ்லிம்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அவசியமானதாகும்” எனத் தெரிவித்த ஹசனலி, வெறும் பசப்பு வார்த்தைகளுக்கு இடம்கொடுக்காது, மு.காங்கிரஸ் எனும் இயக்கத்தைப் பாதுகாக்க முன்வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்  வகுத்துக்காட்டிய வியூகத்தின் அடிப்படையில், மூன்று தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் நிறுத்தியுள்ளதாகவும், இந்த மூவருக்கும் வாக்களிப்பவர்கள்தான், முஸ்லிம் காங்கிரசின் உண்மையான போராளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கருதும் என்றும், அவர் இதன்போது கூறினார்.

இதேவேளை, மேற்படி இளைஞர் மாநாடு காலை 9.30க்கு ஆரம்பித்து, பிற்பகல் 3.30 மணிவரை நடைபெறவுள்ளதாகவும், இந்த மாநாட்டுக்கு இளைஞர்களை அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், மாநாட்டின் ஏற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான, மாகாணசபை உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன் தெரவித்தார். 

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாப் பதவி வகித்த, தற்போதைய வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் முன்னாள் கிழக்குமாகாண சுகாதார அமைச்சரும் வேட்பாளருமான  எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ. மஜீத், அமைச்சர் றஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.எம். பறக்கத்துல்லாஹ் மற்றும் பொறியலாளர் இபத்துல் கரீம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். Hasan Ali - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்