பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

🕔 October 16, 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும் அவருடைய வாகனத்தில் இருந்து இறங்கினார். மழை காரணமாக அப்பகுதியில் சேறு காணப்பட்டது. இந்த நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய அவருடைய பாதணியில் சேறு அப்பியதன் காரணாமாக அதனை சுத்தம் செய்ய முற்பட,  அதை வாங்கிய அவரின் மெய்ப் பாதுகாவலர் துணியால் சுத்தம் செய்தார்.

இதையடுத்து அவருக்கு உதவியாக கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சுத்தம் செய்து கொடுத்தார். இவ்வாறு தனது இரண்டு பாதணிகளையும் கழற்றி கொடுத்து சுத்தம் செய்த பின்னரே பொலிஸ்மா அதிபர்  நிகழ்வு இடத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை அவ்விடத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறப்பு அதிரடிப் படையினர்,பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்