புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம்

🕔 October 15, 2017
‘எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை புதிது செய்தித்தளத்தில் ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம்.

அதில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு, சில தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பேராசிரியர் ஹஸ்புல்லா, புதிது பிரதம ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு, சில விளக்கங்களையும் வழங்கினார்.

மேலும், எமது ஈமெயிலுக்கும் அவர் பேசிய விடயத்தினை எழுத்து வடிவில் அனுப்பி வைத்துள்ளார். அதனை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
O
உங்கள் செய்தித் தளத்தில் நேற்றைய தினம் வெளியான செய்தி தொடர்பில் விளக்கமொன்றைத் தர விரும்புகிறேன்.

பேராசியர் எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ் ஆகிய நான், அரசியலமைப்பின் 17ஆம் திருத்த சட்டப்படி உருவாக்கப்பட்ட  சுயாதீன எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் மூவர் அடங்கிய குழுவின் அங்கத்தவராவேன்.

சுயாதீன ஆணைக்குழுவுக்கு 2016 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம், சுயாதீன ஆணையாளராக ஜனாதிபதியால் நான் நியமிக்கப்பட்டு, எனது கடமைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அண்மையில் மாகாணசபை எல்லை நிர்ணய தேசிய குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவிற்கு சுயாதீன எல்லை நிர்ணய அங்கத்தவர்கள் மூவரும், ஏனைய  இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இக் குழுவில் எனது அங்கத்துவம் சுயாதீன எல்லை நிர்ணய ஆணையாளர் என்ற அடிப்படையில் அமைகின்றது. இந் நியமனம் அரசியலுக்கு அப்பாற்பட்டதும் சுயாதீனதுமான நியமனம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே உங்கள் செய்தியில் எனது நியமனம் குறித்து குறிப்பிடப்பட்ட விடயம் தவறானது என்பதை அறியத் தருவதோடு, தயவு செய்து உங்களின்   செய்தி குறித்து வாசகர்களுக்கு தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சுயாதீன எல்லை நிர்ணய ஆணையாளர்
பேராசியர். எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ்

ஆசிரியர் குறிப்பு:

குறித்த செய்தி தொடர்பில் சில தெளிவுகளை, ஒரு பதிவின் மூலம் மிக விரைவில்,  நாம் வாசகர்களுக்கு வழங்குவோம்.

அதேவேளை, எமது செய்தியினால் பேராசிரியருக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமாயின், அதற்காக வருந்துகிறோம்.

தொடர்பான செய்தி: எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்