இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

🕔 October 14, 2017

– அஹமட் –

க்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொத்துவில் தொகுதிக்குள் ஒரு துண்டாகவும், சம்மாந்துறைத் தொகுதிக்குள் இன்னொரு துண்டாகவும் பிரிந்து கிடக்கும் அக்கரைப்பற்றினை, புதிய தொகுதிகளை உருவாக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கை மூலமாக ஒன்றாக இணைத்து, பொத்துவில் தொகுதிக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அக்கரைப்பற்றின் அரசியல் ரீதியான வாக்குப் பலத்தினைச் சிதைப்பதற்காக, அப் பிரதேசத்தினை இரண்டாகக் கூறுபோட்டு, ஒரு பகுதியினை பொத்துவில் தொகுதிக்குள்ளும், மறு பகுதியினை சம்மாந்துறை தொகுதிக்குள்ளும் பிரிக்கும் சதித் திட்டம் 1976ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

இதன் காரணமாக தொகுதி வாரித் தேர்தல் நடைமுறையிலிருந்த போது, அக்கரைப்பற்றுப் பிரதேசம் அரசியல் ரீதியாகப் பலமிழந்தது. ஆனாலும்,  மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரத் தேர்தல் நடைமுறைக்கு வந்தமையினால், இரண்டு தொகுதிகளுக்குள் அக்கரைப்பற்று கூறுபோடப்பட்டதன் பாதிப்பினை அப்பிரதேச மக்கள் பெரிதாக எதிர்நோக்கவில்லை.

ஆனால், இனி வரும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதியும், விகிதாசாரமும் கலந்த தேர்தலாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பிரதேசம் ஒரு தொகுதிக்குள் கொண்டுவரப்படும் போதுதான் அப்பிரதேசம், அரசியல் ரீதியாக பலமடையும். அதிலும், பொத்துவில் தொகுதிக்குள் அக்கரைப்பற்று சேர்க்கப்படும்போதுதான் அதிக நன்மை கிடைக்கும்.

இதற்கு தற்போதைய காலகட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்தல் அவசியமாகும். தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்காக, எல்லை நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் அக்கரைப்பற்று சார்பில் இந்தக் கோரிக்கை – முன் வைக்கப்படுதல் வேண்டும்.

அக்கரைப்பற்றிலுள்ள அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் அனைவரும் இது விடயத்தில் அனைத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றிணைய வேண்டும்.

இந்த சந்தப்பம் கைநழுவிப் போனால், அரசியல் ரீதியாக பலத்தினைப் பிரயோகிக்க முடியாததொரு பிரதேசமாக, வரலாறு முழுவதும் அக்கரைப்பற்று இருக்கும் நிலை ஏற்பட்டு விடும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட தொகுதியும், விகிதாசாரமும் கலந்ததாகவே நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

எனவே, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பொத்துவில் தொகுதிக்குள் கொண்டுவரும் போதுதான், அக்கரைப்பற்றிலிருந்து மாகாண சபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் நமது பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்