இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு

🕔 October 14, 2017

வெளிநாட்டு கடவுச்சீட்டினை வைத்திருக்கும் ஒருவர், இலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது எனும் வாதம் தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் என்று, தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க, பிரித்தானிய பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேசிய ஜனநாயகக் கட்சியின் செயலாளராகவும் உள்ளார்.

இந்த விவகாரத்தினையடுத்து, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இலங்கையிலுள்ள அரசியல் கட்சியொன்றில் பதவி வகிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் தெரிவிக்கையில்; தேசிய ஜனநாயகக் கட்சியானது சட்டத்தின் பிரகாரம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால், தேர்தல் ஆணைக்குழு எதுவும் செய்ய முடியாது என்றார்.

“நாடாளுமன்றம்தான் சட்டங்களை உருவாக்குகின்றது. அவற்றில் மாற்றம் செய்ய எங்களால் முடியாது” என்று தெரிவித்த ஹுல்; இலங்கையிலுள்ள அரசியல் கட்சியொன்றில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் பதவி வகிக்க முடியாது என்று, சட்டம் தடை செய்யவில்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் போட்டியிட முடியாது என்று, சட்டத்தில் உள்ளது. ஆனால், இலங்கையில் வதிவிட வீசாவினைக் கொண்டுள்ள வெளிநாட்டு பிரஜையொருவர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஜனநாயகக் கட்சியின் அன்னச் சின்னத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்