சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

🕔 October 14, 2017

– முன்ஸிப் அஹமட் –

திர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு – ஒலுவில் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவதெனவும், வேட்பாளர்களை தெரிவு செய்யும் முறைமை குறித்தும் மேற்படி சந்திப்பில் பேசப்பட்டது.

இதன்போதே, சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.கட்சியில் மு.கா. போட்டியிடும் என்று ஹக்கீம் கூறினார்.

இதன்போது, சம்மாந்துறையைச் சேர்ந்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், ஹக்கீமுடைய இந்த தீர்மானத்துக்கு தனது எதிரப்பினை வெளியிட்டதாகத் தெரியவருகிறது. “ஐ.தே.கட்சியின் சின்னத்தில் தொடர்ந்தும் மு.கா. போட்டியிடுவதால் மு.கா.வின் சின்னம் என்னவென்று மக்களுக்கு மறந்து விடும்” என்று, மன்சூர் கூறியதாகவும் அறிய முடிகிறது.

இருந்தாலும், ஹக்கீம் தனது முடிவிலிருந்து மாறவில்லை. “சம்மாந்துறையில் தனித்துப் போட்டியிட்டு மூக்குடைபட முடியாது. தற்போதைய நிலையில் ஐ.தே.கட்சியில் மு.கா. போட்டியிடுவதுதான் கட்சிக்கு நல்லது” என்று ஹக்கீம் கூறியதாக, அங்கிருந்த ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.

இது குறித்து, அங்கிருந்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் நம்மிடம் பேசுகையில்; ”தலைவரின் கதையைப் பார்த்தால், தேர்தலுக்கு முன்பாகவே சம்மாந்துறையில் மு.கா.வின் தோல்வி உறுதியாகி விட்டது” என்றார்.

எதிர்வரும் ஜனவரி மாதம், நாடு முழுவதும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீம் கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டு, தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்