அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

🕔 October 11, 2017
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே, சிங்களப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக வீடுகளை அமைத்து வருகின்றார். இந்த வீடுகளைக் கட்டுவதற்கு அவர் அனுமதி பெறுகின்றாரா” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கே, அமைச்சர் ராஜித இவ்வாறு பதிலளித்தார்.

“பொத்துவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி இருந்தார். இந்த அடிக்கல்லில் ஆங்கிலமும் இன்னுமொரு மொழியும் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பொறிக்க அனுமதி உண்டா” என்று அந்த ஊடகவியலாளர் மேலும் கேட்ட போது;

“வீடுகள் அமைப்பதுதான் பிரதானமானதே தவிர, இவ்வாறான வேலைத்திட்டங்களில் நாட்டப்படும் அடிக்கற்களில் எந்த மொழி அமைந்திருக்க வேண்டுமென்பது முக்கியமாதல்ல” எனவும் அமைச்சர் ராஜித பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்