மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்

🕔 September 17, 2017

– முன்ஸிப் அஹமட் –

கி
ழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இவ்வேளை, அங்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம், தனது  வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கினார்.

இந்த சூழ்நிலையில், தவத்தைக் கண்ட பொதுமக்கள்; “நீ ஏனடா இங்கு வந்தாய், இங்கு உனக்கென்ன வேலை” என்று கேட்டு, ஆத்திரமுற்ற நிலையில் தவத்தை நோக்கிப் பாய்ந்தனர்.

இதன்போது அங்கு நின்றிருந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தவத்தைக் காப்பாற்றி, அவரின் வாகனத்தினுள் ஏற்றி, உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு கூறினார்.

அன்சில் கூறியபடி தவமும் வாகனத்தினுள் ஏறி, அங்கிருந்து கிளம்ப முயற்சித்த போதும், தவத்தின் வாகனத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்கள், வாகனத்தை அடித்து நொறுக்க முற்பட்டனர்.

இருந்தபோதும் களத்தில் இறங்கிய அன்சிலும் அவரின் சகாக்களும், தவத்தின் வாகனத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்களை பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் விலக்கி, தவத்தை அங்கியிருந்து தப்பிக்க வைத்தனர்.

பாலமுனையில் தவம் மாட்டியபோது, அன்சில் மட்டும் அங்கிருந்திருக்கவில்லை என்றால், தவத்தின் நிலை மிக மோசமாகியிருக்கும் என்று, அங்கிருந்த சிரேஷ்ட பிரஜை ஒருவர் புதிது செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்