அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத்

🕔 September 15, 2017

 

குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கொள்ளாது, பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த  நிகழ்வில் கனிய மணல் நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன, அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்கு ஹெட்டி, மேலதிக செயலாளர் இந்திகா, முன்னாள் நகர பிதா டொக்டர் ஹில்மி,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தௌபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்  இங்கு மேலும் கூறுகையில்;

“ஊழியர்களை நிரந்தரமாக்கும் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நாம் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்நோக்கினோம். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி இந்த முயற்சியில் வெற்றிபெற்றோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் முயற்சியில் எமக்கு வழங்கிய பங்களிப்பை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனத்தில் அரசியல் உள்நோக்கங்களினால் வழங்கப்பட்ட நியமனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் அதிகாரங்கள் இழக்கப்பட்ட பின்னர் ஊழியர்களும் தொழில் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய பல ஊழியர்கள் வேதனையுடனும், மனக்கவலையுடனும் வாழ்வதை நான் அறிவேன். அவ்வாறான எந்தவிதமான அரசியல் நோக்கங்களுமின்றி, தூய முறையில் இந்த பிரதேசத்தவர்களுக்கு கட்சி, இன பேதங்களுக்கு அப்பால் நியமங்களை வழங்கி தற்போது நிரந்தரமாக்கியுள்ளோம்.

அமைச்சர்கள் அரசியல்வாதிகள் தமக்கு ஆதரவென்ற மாயையை இந்த நிறுவனத்துக்குள் ஏற்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க எவருக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. எல்லோரும் சரிசமமாகவே கருதப்படுவதோடு எவருக்கும் வரப்பிரசாதங்கள் வழங்கப்படவில்லை, வழங்கப்படவும் மாட்டாதென்பதை மிகவும் உறுதியுடனும், நேர்மையுடனும் தெரிவிக்கின்றேன். அதே போன்று மேலதிகாரிகளுடன் தேவையற்ற வீண் சர்ச்சைகளில் ஈடுபடாமல் மனச்சாட்சிப்படி பணி புரியுங்கள்.

உங்களை முன்னேற்றுவதோடு நிறுவனத்தையும் முன்னேற்றப்பாடுபடுங்கள். உங்களின் செயற்பாடுகள் மூலமே எதிர்காலத்திலும் இங்கு பணிபுரிபவர்களை நிரந்தர வேலைத்திட்டத்தில் உள்வாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்பதை நீங்கள் மனதில் இருத்த வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் சட்டத்தரணி மைத்திரி குணரட்னவும் உரையாற்றினார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்