உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

🕔 September 12, 2017

ள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் உள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதம் 09ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பானதொரு தினமாக உள்ளபோதும், அத்தினத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதம் 30 அல்லது 31ஆம் திகதியிலும் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. காரணம், இந்த நாட்களில் அரச நிறுவனங்கள் தமது கணக்காய்வுகளை நடத்துவதால், அரச உத்தியோகத்தர்கள் எவரும் விடுமுறைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது எனவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

மேலும், அடுத்த வருடம் ஜனவரி நடுப்பகுதியில் தைப்பொங்கல் பண்டிகை உள்ளமையினால், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்