உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

🕔 September 11, 2017

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –

ள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை, 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

உள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும். அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக் கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீதத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக சபையொன்றின் வட்டாரங்களின் எண்ணிக்கை 12 என்றால் அது 60 சதவீதமாக கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீத்தத்திற்கும் இன்னும் 08 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த அங்கத்தவர்கள் தொகை 20 ஆக அமையும்.

வேட்பு மனு

கட்சிகள் அல்லது குழுக்கள் இரண்டு வேட்புமனுப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முதலாவது வேட்பு மனு

முதலாவது வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும் வேட்பு மனுவாகும். இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க வேண்டும். இவர்களுள் 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

இரண்டாவது வேட்பு மனு

இரண்டாவது வேட்பு மனுப்பத்திரத்தில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40 சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும் மேலதிகமாக 03 நபர்களும் சேரக்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.

இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

இளைஞர் பிரதிநிதித்துவம்

மொத்த வேட்பாளர்களின் தொகையில் 30 சதவீதமானவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும்.

கட்டுப் பணம்

கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 1500 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.

சுயேச்சைக் குழுக்கள் வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 5000 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.

வாக்கெடுப்பு

வாக்காளர்கள் தமக்கு வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்புகின்ற கட்சியின் சின்னத்திற்கு அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்திற்கு நேரே புள்ளடியிடுதல் வேண்டும்.

வாக்கெண்ணல்

வாக்குகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும். அவசர நிலமைகளில் தெரிவத்தாட்சி அலுவலரினால் வாக்கு எண்ணும் நிலையங்கள் மாற்றப்படலாம்.

தேர்தல் முடிவுகள்

– வட்டார பிரதிநிதித்துவம்

வட்டாரங்களில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் ஆகக் கூடுதலான வாக்கினை பெறும் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

– விகிததாசார முறைமை

உள்ளுராட்சிப் பிரதேசம் ஒன்றில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் பிரிக்கப்பட்டு பெறப்படும் தொகை தகைமை பெறும் எண்ணிக்கை எனப்படும்.

ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் தகைமை பெறும் எண்ணினால் பிரிக்கப்பட்டு கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் உரித்தாக வேண்டிய உறுப்பினர்களின் தொகை தீர்மானிக்கப்படும்.

ஏற்கனவே வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பான உறுப்பினர்களின் தொகை, கட்சிகளுக்கு உரித்தான தொகையிலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி உறுப்பினர்களை நியமிக்குமாறு கட்சிகள் கோரப்படும்.
அவ்வாறு நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்படலாம்.

பெண் அங்கத்தவர் நியமனம்

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் மொத்த அங்கத்தவர் தொகையில் 25 சதவீதமானவர்கள் பெண்களாக இருப்பதனை உறுதி செய்வதற்காக மேலே விபரிக்கப்பட்டவாறு விகிதாசார அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை பெண்களை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கீழே சொல்லப்படும் விதத்தில் பின்வருமாறு கணக்கீடு செய்து அறிவுறுத்தல் வழங்கும்.

அதாவது, ஒரு கட்சியில் விகிதாசார அடிப்படையில் குறித்த கட்சிக்கு உரித்தான உறுப்பினர் தொகையினை விட அதிகமான அங்கத்தவர்களை வட்டார அடிப்படையில் பெற்றிருந்தால் அக்குறித்த கட்சிகளில் பெண் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்கட்சிகள் மேலதிகமாக பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், ஒரு கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையும் 03 பேருக்கு குறைவான உறுப்பினர்களையும் பெற்றிருந்தால் அக்கட்சியும் பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனைய கட்சிகளின் வாக்குகளின் விகிதாசார அடிப்பைடயில் பாராளுமன்ற தேர்தலின் பின்பு தேசியப்பட்டியல் தீரம்hனிக்கபடுவது போன்று குறித்த சபைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதமான பெண் அங்கத்தவர்கள் தெரிவு உறுதிப்படுத்தப்படும். இதன் போது கட்சியின் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் பெண் அங்கத்தவர்கள் நியமிக்கப்படலாம்.

ஆக மொத்தத்தில் ஒரு உள்ளுராட்சி பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு பிரதிநிதி இருப்பதுவும், மொத்த அங்கத்தவர்களில் 25 சதவீதமானோர் பெண்களாக இருப்பதுவும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் பிரிக்கப்பட்டு வழங்;கப்படுவதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட வேண்டியுள்ளது அத்துடன் உள்ளுராட்சி அமைச்சர் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை சட்டங்களை திருத்த வேண்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்