கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

🕔 September 8, 2017

ர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலிமாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர்.

அந்த வகையில், மேற்படி குழு – நாளை சனிக்கிழமையும் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் மேற்படி பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளது.

மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல் மற்றும் பெரிய முறிப்பு வனாந்தரங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தரமாக பிரகடனம் செய்து, விஷேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.

இந்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவில் இருந்தபோது, இந்த வைத்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இதனையடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இது குறித்து கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியினை சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீனும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளும், விஷேட வர்த்தமானியின் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விளக்கமளித்தனர். இதனையடுத்து, ஜனாதிபதியினால் இவ்விஷேட குழு அமைக்கப்பட்டதுடன், மக்களின் போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர், இக்குழுவினர் கடந்த மாதம் அப்பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் கருத்துக்களை அறிந்தனர். மேலும், இது தொடர்பிலான அறிக்கையினை கடந்த மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இக்குழுவினர் சமர்பிக்க இருந்த நிலையில், அப்பிரதேச மக்கள் உடனடியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பிரிதொரு தினத்தை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் வேண்டியிருந்தனர்.

இதற்கமைய ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், மக்களின் இந்த கோரிக்கையினை தெரியப்படுத்தி, எழுத்து மூலமான வேண்டுகோளினையும் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுள்ளதாகவும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை அந்த காலத்தினை நீடிப்பு செய்துள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து, வருகைத்தரவுள்ள மேற்படி குழுவிடம் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments