நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

🕔 September 6, 2017

– முன்ஸிப் அஹமட் –

புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் நாட்டார் இசைக் குயில் எனப் போற்றப்படும் மீரா உம்மாவின் மரணச் செய்தியறிந்த நிலையில், அவர் தொடர்பான நினைவுகளை பசீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இன்று மௌத்தான இனிய குரலின் சொந்தக்காரி மீரா உம்மா, நூற்றாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர்.

எழுபதுகளின் ஆரம்பத்தில், நான் பத்து வயது சிறுவனாக இருக்கையில் தொடங்கி, பல தடவை  அவரது இனிய நாட்டார் பாடல்களை ஏறாவூர் மேடைகளில் கேட்டிருக்கிறேன். அற்புதமான குரல் வளமும், கவியியற்றும் ஆற்றலும், நினைவுத் திறனும் கொண்டவர். புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும், உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவி இந்தப் பெண்மணி.

இவர்தான் கிழக்கிலிருந்து மேடையேறிப் பாடலிசைத்த முதல் முஸ்லிம் பெண்ணாக இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும். முதல் முஸ்லிம் பெண் வைத்தியர், பொறியாளர், நீதிபதி, வக்கீல், ஆசிரியை, கணக்காளர், விரிவுரையாளர் என்கிற வரிசைப் பட்டியலில் வரகவிப் பாடகி மீரா உம்மா முதன்மையானவராவார்.

இன்று கிழக்கில் சிறந்த முஸ்லிம் பெண் நவீன கவிஞர்கள் தமிழுலகில் வெற்றித் தடம் பதித்துள்ளனர். அன்று, நாட்டார் பாடல்களியற்றிய முஸ்லிம் பெண்கள் அநேகர் வாழ்ந்தனர், இன்னும் சிலர் வாழ்கின்றனர். ஆனால், இசைக்குழு வைத்திருந்து ஒரு முஸ்லிம் பெண் மேடையேறிப் பாடலிசைத்ததாக மீரா உம்மாவைத் தவிர வேறு எவரையும் நான் கேள்வியுறவில்லை.

கண் பார்வையற்றவராக இருந்த போதும், முஸ்லிம் பெண்ணான மீரா உம்மா மேடை ஏறியமைக்காக அன்றைய ஆண்கள் சிலரால் தூற்றப்பட்டதை நான் செவியுற்றிருக்கிறேன். பிற்காலத்தில் அவர் அநேகமாக மேடையில் பாடவில்லை. இது அவரை நினத்துப் பார்த்து நெக்குருகும் நேரம்.

மீராம்மா; உங்களின் இறுதிப் பயணப் பாதை எங்கும் ஒளி பரவட்டும். அடைகிற இலக்கில் அமைதியான மகிழ்ச்சி பொங்கட்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்