08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல்
உலகின் பாதிச் சொத்துகள் 08 பேரிடம்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மையாகும்.
சர்வதேச ரீதியாக முன்னணியிலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததாக உள்ளது என்றும், உலகின் 50 சதவீத சொத்துக்கள் அந்த எட்டு பேரிடமே இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஒக்ஸ்பாம் அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரத்தை ஆளும் அந்த எட்டு உச்ச பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் ஆவார். மைக்ரோசொப்ட் நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (இலங்கைப் பெறுமதியில் 11 லட்சத்து 46 ஆயிரத்து 225 கோடி ரூபாய்).
மற்றைய பணக்காரர்களின் விபரம் வருமாறு;
- ஸ்பெயின் தொழில் அதிபரான அமென்ஷியோ ஒர்டேகா என்பவராவார். இவரின் சொத்து மதிப்பு 67 பில்லியன் அமெரிக்க டொர் ஆகும்.
- அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் என்பவராவார். இவரின் சொத்து மதிப்பு 60.8 பில்லியன் அமெரிக்க டொலர்.
- மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு என்பவர். இவரின் சொத்து மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்.
- அமேசான் டொட்கொம் நிறுவனரான ஜெப் பெசோஸ். இவரின் சொத்து மதிப்பு 45.2 பில்லியன் அமெரிக்க டொலர்.
- பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க். இவரின் சொத்து மதிப்பு 44.6 பில்லியன் அமெரிக்க டொலர்.
- ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன். இவருடைய சொத்து மதிப்பு 43.6 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
- மைக்கேல் ப்ளூம்பெர்க் எனும் தொழிலதிபர். இவரின் சொத்து 40 பில்லியன் டொலர் மதிப்புடையதாகும்.
உலக அளவில் தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால், ரஷ்யாவில்தான் அதிகளவில் சமநிலையற்ற பொருளாதார போக்கு நிலவுவதாக ஒக்ஸ்பாம் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் 74.5 சதவீத பொருளாதார வளர்ச்சியினை 01 சதவீதமான ரஷ்ய செல்வந்தர்கள் மட்டும் அனுபவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த செல்வத்தின் 42.1 சதவீதம், 01 சதவீத அமெரிக்க செல்வந்தர்களிடம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 58 சதவீத செல்வம் 01 சதவீத பணக்காரர்களிடம் இருக்கிறது.