ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

🕔 September 4, 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்ய சமூகத்துக்கான ஒற்றுமைப் பேரணி எனும் தொனிப் பொருளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே, மேற்கண்ட தகவலை பிரதமர் நஜீப் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக, ஆங்சாங்சூகியை மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்து நேரம் ஒதுக்கிக் கேட்டிருந்தார். அதன்போது ஆங்சாங்சூகி; ‘ரோஹிங்ய பிரச்சினை சம்பந்தமாக பேசுவதென்றால், உங்களைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது’ என முகத்துக்கு நேராகக் கூறியிருந்தார்” என்றார்.

ரோஹிங்யாவில் மியன்மார் அரசாங்கம் இன அழிப்பை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டிய மலேசிய பிரதமர்; “தென்கிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரப்பாடு ஆகியவற்றினை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, ரோஹிங்யா மீதான ஒடுக்குமுறையை மியன்மார் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்