விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

🕔 August 17, 2017

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாஸ ராஜபக்ஷ, தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறியதோடு, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த, தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும் நீதியமைச்சரின் கூற்றை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை முடிவுக்கு கொண்டு வரும் வரை, ஓய போவதில்லை என்று தான் கூறவில்லை எனவும் விஜேதாஸ ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீதியமைச்சரும் தனியாக கலந்துரையாடுவதற்காக வேறு ஒரு இடத்துக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்