சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

🕔 August 16, 2017

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த சிராந்தி ராஜபக்ஷ; ஒரு கட்டத்தில் தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று கூறியிருந்தமையானது, தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின்னர் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார், அதனை படித்துப் பார்த்து கையொப்பமிடுமாறு, சிராந்தியிடம் கேட்டனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

றகர் வீரர் வசிம் தாஜுதீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிலிய சவிய அமைப்பின் டிபண்டர் வண்டி தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. மேற்படி அமைப்பினை சிராந்தி நடத்தி வருகின்றார்.

விசாரணையின் போது சிராந்தியுடன் உடன் சென்ற மஹிந்த மற்றும் சட்டத்தரணிகள் எவரும், விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந் நிலையில் விசாரணையின் பின்னர், வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிடுமாறு சிராந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

பதுளையில் பிறந்த சிராந்தி, சிங்களத்தை திடீரென மறந்தமையானது, குற்றப் புலனாய்வுப் பிரிவில் பிரபலமாக பேசப்படுகின்றது.

சிங்களம் தெரியாது என சிராந்தி கூறியதை தொடர்ந்து, விசாரணை அறைக்கு வெளியில் இருந்த சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவை அழைத்த புலனாய்வுப் பிரிவு, அவர் ஊடாக வாக்கு மூலத்தை வாசித்துக் காட்டியுள்ளது.

எனினும் சட்டத்தரணி கோரும் திருத்தங்களுக்கு அங்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது. ஏனெனில் விசாரணை முழுதையும் புலனாய்வுப் பிரிவு ஒலிப் பதிவு செய்துள்ளதால் சிராந்தி தரப்புக்கு ஏற்றாற்போல் வாக்கு மூலத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் போகவே, குற்றப் புலனாய்வு பிரிவினர் பதிவு செய்த வாக்கு மூலத்தில் சிராந்தி கையொப்பமிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்