இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

🕔 August 13, 2017

ந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில் சுமார் 35 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சியினால் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், அச்சம் காரணமாக மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் தப்பி ஓடியதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பில் பெங்குலு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கூறுகையில்; “பூமியதிர்ச்சியை சில நிமிடங்கள் கடுமையாக உணர்ந்தோம். இதன் காரணமாக, நானும் எனது குடும்பத்தவர்களும் வீட்டை விட்டும் வெளியே ஓடி விட்டோம். இதன்போது, 07 மாதங்களையுடைய எனது பேரப்பிள்ளையையும் தூக்கிக் கொண்டு ஓட நேர்ந்தது. எங்கள் அயலவர்கள் அனைவரும், இவ்வாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார்கள்” என்றார்.

எவ்வாறாயினும், இதுவரையில் சேத விபரங்கள் குறித்து தெரிய வரவில்லை.

இந்தோனேசியாவானது பசிபிக் பிராந்தியத்தின் ‘நெருபு்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு டெக்டோனிக் எனப்படும் நிலக்கீழ் தகடுகள் மோதிக் கொள்வதுண்டு. அதனால், இங்கு அடிக்கடி  பூமி அதிர்ச்சியும், எரிமலை வெடிப்பும் இடம்பெறுவதுண்டு.

Comments