அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

🕔 August 13, 2017

– முஸாதீக் முஜீப் –

நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பாதாள உலகக் கோஸ்டியினர் பயணித்த வேனை, விசேட அதிரடிப்படையினர் டிப்பென்டர் வண்டியில் துரத்தி வந்தனர்.

இதன்போது, குரணை பிரதேசத்தில் கிரேண்டீஸா ஹோட்டல் அருகில் வைத்து வேனில் பயணித்தவர்கள், விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனை அடுத்து இரு தரப்பினருக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. இதன்போது வேனில் பயணித்த பாதாள உலகத்தைச் சேர்ந்த நான்கு பேரில் இருவர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவத்தின்போது, இரு தரப்பினரின் வாகனங்களும் அருகிலிருந்த வடிகானில் சிக்கிக் கொண்டன.

பாதாள உலகத்தினர் பயணித்த வேனில் இருந்து துப்பாக்கிகள், வாகன இலக்கத் தகடுகள் மற்றும் கைவிலங்கு என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்