கல்குவாரி வெடித்ததில், பிரான்ஸ் பிரஜை காயம்

🕔 August 11, 2017

– க. கிஷாந்தன் –

தெமோதர பிரதேசம்,பதுளை – பண்டாரவளை பிரதான வீதியிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் காயமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதர பகுதியில் அமைந்துள்ள மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று மிகத் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது மோதுண்டது. இதனால், குறித்த நபர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலுள்ள தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.

Comments