எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

🕔 August 11, 2017

த்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.

ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என். ஹெபிடாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட  இந்தக் கட்டிட திறப்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி செபஸ்டியன், யு. என். ஹெபிடாட் நிறுவன ஆலோசகர் ஹமீட் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாகிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து பேசுகையில்;

“ஜப்பானிய விஷேட தூதுவர் யசூஸி அக்காசி இலங்கைக்கு விஜயம் செய்த போது, வடபுல அகதி மக்களின் கல்வித் தேவைகள் குறித்தும் கஷ்டங்கள் குறித்தும் நாம் எடுத்துரைத்தோம். அதன் பின்னர் ஜப்பானியத் தூதரகத்தின் மூலம் பல்வேறு கடிதப்பரிமாற்றங்களை மேற்கொண்டதையடுத்து ஜப்பானிய அரசு  இந்த உதவியை நல்கியது.

கால் நூற்றாண்டுகாலமாக மக்கள் வாழாதமையினால் காடாகிப்போய்க் கிடந்த இந்தப் பிரதேசங்களை எத்தனையோ சிரமங்களின் மத்தியிலும் சவால்களுக்கு இடையேயும் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் வாங்கிக்கொண்டு கட்டியெழுப்பியுள்ளோம். இங்குள்ளவர்களின் மனச்சாட்சிக்கு இது நன்கு தெரியும். நாம் என்னதான் பணி செய்தாலும் விமர்சிப்பதற்கும், குறை கூறுவதற்கும் என்றே ஒரு கூட்டம் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனால் அபிவிருத்திப் பணிகளிலே பிழைகளைக் கூறுவதும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பூதாகரப்படுத்துவதிலுமே அவர்கள் குறியாக இருக்கின்றனர். சிலர் இதை தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

அரசியலிலிருந்து எம்மை எப்படியாவது வீழ்த்திவிடலாம் என கங்கனம் கட்டிக்கொண்டு, என் எந்நேரமும் சதிவேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். காழ்ப்புணர்வு தான் இதற்குப் பிரதான காரணமாகும்.

மறிச்சிக்கட்டிப் பிரதேசம் முன்னொரு காலத்திலே, தண்டனையாக இடமாற்றம் செய்வதற்கு (Punishment Transfer) பெயர் போன இடமாக இருந்தது. எந்த அரச அலுவலராவது, ஆசிரியர்களாவது கடமையில் தவறு இழைத்தாலோ, அல்லது அரசியல் பழிவாங்கலுக்காவோ முசலிப் பிரதேசத்திலுள்ள கரடிக்குளி, மறிச்சிக்கட்டி மற்றும் பாலைக்குழிக்கே அனுப்புவது வழமையாக இருந்தது.

நாட்டிலுள்ள அநேகருக்கு மறிச்சிக்கட்டியை இப்போது நன்கு தெரியும். காரணம் இந்தப் பிரதேசத்தில் நாம் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்த போது வில்பத்தை அழிக்கின்றார்கள். யானைகளை சுட்டுக் கொல்கின்றார்கள்என்று இனவாதிகள் போட்ட கூக்குரல் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதிந்து, எங்களைப் பற்றிய பிழையான எண்ணத்தை உருவாக்கி இருக்கின்றது. எனினும் நாங்கள் நேர்மையாகவே இந்தப் பணியை முன்னெடுத்தோம். மனிதாபிமானமுள்ளோர் நியாயத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

மாணவர்களும், எவ்வாறான கஷ்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு கற்க வேண்டும். அதிபர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க பழக வேண்டும். ஒழுக்கமே மாணவ சமூதாயத்திற்கு பிரதானமானது. இவற்றினைக் கடைப்பிடித்தால் நீங்கள் கல்வியிலே உயர்வடைய முடியும்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments