அமைச்சரவைக்கு வராமல், நழுவினார் ரவி
அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருகை தராமல் நழுவிக் கொண்டதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனது நிலைப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிடுவார் எனவும் அரசியல் அவதானிகள் கருதினர்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகளவானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க தனக்கு எதிரான விசாரணைகள் முற்றுப் பெறும் வரையிலாவது, தன்னுடைய அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய முடிவை அறிவிப்பார் என்று, ஜனாதிபதிக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக அரசாங்க தரப்புகள் தெரிவிக்கின்றன.
ரவி ராஜிநாமா செய்ததும் அவருடைய வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு அமைச்சர்களான திலக் மாரப்பன, நவீன் திஸாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரில் ஒருவரை நியமிப்பமதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.