மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்
– பிறவ்ஸ் முகம்மட் –
மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 04ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.
இத்திட்டத்தினால் நாளொன்றுக்கு 60,000 கனமீற்றர் நீர் வழங்குவதன் மூலம் மாத்தறை, திஹகொட தெவிநுவர, திக்வெல்ல, வெலிகம, வெலிபிட்டிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, கிரிந்த, அதுரலிய, பெலியத்த மற்றும் தங்கல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 284,808 பேர் நன்மையடையவுள்ளனர்.
சிறுநீரக நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின்கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18,208 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் இன்னும் 03 வருடங்களின் பின்னர் நிறைவுபெறும்.
இதன் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, ராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெணான்டே புள்ளே, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.