அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“மத்திய அரசாங்கத்தின் கடந்த 7ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின்படி, 20ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதெனவும், மாதமொன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி ஒரு வருட பயிற்சியின் பின்னர் தொழிலை நிரந்தரமாக்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இது அநேகமாக ஜனவரியில்தான் சாத்தியமாகும்.
கிழக்கு மாகாண சபையும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே, பட்டதாரிகளை ஆசிரியர்களாக உட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நேற்று கோரியுள்ளது. இதனையடுத்தே, எமது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.